பீகார் பஞ்சாயத்து தேர்தலில் விநோதம்: இறந்ததை மறைத்து ஓட்டு போட்ட மக்கள்

ஜமுயி: பீகாரில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அனுதாப அலையில் கிடைத்த ஓட்டினால் இறந்தவர் வெற்றி பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநில பஞ்சாயத்து தேர்தல் கடந்த செப்டம்பர் 24ம் தேதி முதல் 11 கட்டங்களாக நடைபெறுகிறது. தொத்தமுள்ள 2,59,260 பதவிகளுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இறுதிக்கட்ட தேர்தல் வரும் 12ம் தேதி முடிவடைய உள்ளது. ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்து, 2வது நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று கைரா மண்டலத்தில் உள்ள தீபாகர்கார் கிராமத்தின் 2வது வார்டுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அப்போது, 28 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, அந்த வார்டை சேர்ந்த சோகன் முர்மு என்பவர் சான்றிதழ் வாங்க வரவில்லை. அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்த போது அவர் இறந்தது தெரிய வந்தது. பீகார் மாநில பஞ்சாயத்து தேர்தலில் இறந்த ஒருவர் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முர்முவின் உறவினர்கள் கூறும் போது, ``இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவரது விருப்பம். ஆனால் தேர்தலுக்கு 2 வாரத்திற்கு முன்பு முர்மு இறந்தார். ஆனால் அதை வெளியில் சொல்லாமல், முர்முவுக்கே ஓட்டு போட்டு கிராம மக்கள் ஜெயிக்க வைத்துள்ளனர். முர்மு இறந்த பிறகும் அவருக்கே வாக்களித்து அவருடைய கடைசி விருப்பத்தை மக்கள் நிறைவேற்றி உள்ளனர்,’’ என தெரிவித்தனர்.

Related Stories: