கோவையில் 3 யானைகள் சாவு ரயில் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்கு

கோவை: கோவை நவக்கரை மாவுத்தம்பதி வனப்பகுதி அருகே ரயில் பாதையை நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு 3 யானைகள் கடக்க முயன்றன. அப்போது மங்களூரில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ற ரயில் யானைகள் மீது மோதியது. இதில் முன்னால் சென்ற 25 வயதான பெண் யானை, பின்னால் வந்த 18 வயது மக்னா யானை, 6 வயது குட்டி யானை இறந்தன. இது தொடர்பாக கோவை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதன்மை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள் ரயிலை இயக்கிய இன்ஜின் டிரைவர்களான கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சுபேர் (54), திருச்சூர் அவினிசேரி பகுதியை சேர்ந்த அகில் (31) ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன்படி வழக்குப்பதிந்தனர். இவர்களிடம் வன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இன்ஜின் டிரைவர்கள் 2 பேரும் கூறும்போது, ‘‘நாங்கள் ரயிலை இயக்கியபோது வௌிச்சம் குறைவாக இருந்தது. மிகவும் இருட்டான, மேடு பள்ளமான பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது. கருப்பாக உருவம் தென்பட்டது. 100 மீட்டர் தூரம் முன்பே நாங்கள் பிரேக் பிடித்தோம். ஆனால் ரயில் நிற்காமல் சென்று முதலில் வந்த பெண் யானை மீது மோதியது. பின்னர் வந்த 2 யானைகள் மீது ரயிலின் பக்க பகுதி மோதியது. பெண் யானை இன்ஜின் மீது நேருக்கு நேராக மோதிவிட்டது. அந்த யானை ரயில் பாதையிலேயே விழுந்துவிட்டது. மற்ற 2 யானைகளும் பள்ளத்தில் உருண்டு விழுந்தன’’ என்றனர்.

பாலக்காடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் இன்ஜினில் இருந்த மைக்ரோ சிப்பை கைப்பற்ற சென்ற தமிழக வனத்துறையினர் 6 பேரை ரயில்வே ஊழியர்கள் சிறைபிடித்தனர். டிரைவர்களை விடுவிக்கவேண்டும். அப்போதுதான் 6 பேரையும் விடுவிப்போம் எனக்கூறி  விட்டனர். இது தொடர்பாக வனத்துறை மற்றும் ரயில்வே உயரதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். யானை வயிற்றில் 4 மாத கரு: யானைகளின் சடலம் அதே இடத்தில் டாக்டர் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இறந்த பெண் யானையின் வயிற்றில் 4 மாத கரு இருந்தது. பெண் யானையின் தலை இன்ஜின் மீது மோதியது. இதில் யானையின் தலை எலும்புகள், மூளை சேதமாகியிருந்தது. பின்னர், யானைகளின் உடல்கள் அதே இடத்தில் பொக்லைன் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

Related Stories: