×

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை தாமிரபரணியில் 2வது நாளாக வெள்ளம்: தரைப்பாலங்கள் மூழ்கின, திருச்செந்தூர் சாலை துண்டிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் 2வது நாளாக வெள்ளம் நீடிக்கிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் பெரும்பாலும் நிரம்பி விட்ட நிலையில் மழை நீடிப்பதாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அணைகளுக்கு அதிக நீர்வரத்து உள்ளது.

இதனால், பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளில் திறக்கப்படும் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் நிலையில், மழை காரணமாக காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடி வரும் வெள்ளநீரும் ஆற்றில் சேருகிறது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோயில், தைப்பூச மண்டபம் ஆகியவற்றை வெள்ளநீர் தொட்டு செல்கிறது. சிற்றாற்று வெள்ளமும் சீவலப்பேரி அருகே தாமிரபரணி ஆற்றில் கலப்பதால், தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

அதிகப்படியான தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேறி வருவதால் ஏரல் தாமிரபரணி தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. மேலும் திருச்செந்தூர்  - தூத்துக்குடி சாலையில் வரண்டியவேல் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்துக் கொண்டு 2வது நாளாக வெள்ளம் செல்கிறது. அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் 2வது நாளாக போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனிடையே நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று 2வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று சில பகுதிகளில்  சிறிது நேரம் வெயில்  எட்டிப்பார்த்தது. எனினும் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. கடலுக்கு செல்கிறது: ஸ்ரீவைகுண்டம் அணைக்கு நேற்று மாலை 5 மணி நிலவரப்படி விநாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர், அப்படியே ஆற்றில் பாய்ந்து வீணாக கடலுக்கு செல்கிறது.

நேரடியாக பதிவு: மழைநீர் தேங்கியிருந்தால், அதுகுறித்து பொதுமக்களே நேரடியாக பதிவு செய்யும் முறையை கலெக்டர் விஷ்ணு அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் மழைநீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருந்தால், அதுகுறித்து https://nellaineervalam.in/waterlogging/ என்ற இணையதளம் வழியாக நேரடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குமரி: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டிய நிலையில் அதன் தொடர்ச்சியாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. வட்டத்தில் நேற்று காலையும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கல்குளத்தில் 9 வீடுகளும், விளவங்கோட்டில் 13 வீடுகளும் என 22 வீடுகள் இடிந்து விழுந்திருந்தன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு கனமழையின் காரணமாக தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் எப்போதும் நிரம்பியே உள்ளது.

இதையடுத்து அணைக்கு வரும் 1000 கனஅடி உபரி நீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் சின்னசேலம் பகுதியில் உள்ள கடத்தூர், தெங்கியாநத்தம், தென்செட்டியந்தல், பைத்தந்துறை, சின்னசேலம், எலவடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஏரிகள் தற்போது நிரம்பி உள்ளது. சுவர் இடிந்து பெண் பலி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாமியார் தர்கா பகுதியை சேர்ந்தவர் மதர்கான் மனைவி ஜெயபொண்ணு (50). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது, கனமழை பெய்த நிலையில், வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஜெயபொண்ணு உயிரிழந்தார்.

* வராகநதியில் விளைபொருட்கள் பரிசலில் பயணம்
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் நடுப்பட்டி பகுதியில் உள்ள வராகநதி அருகே சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். விளைநிலங்களுக்கு விவசாயிகள் வராகநதி ஆற்றை கடந்தே சென்று வந்தனர். ஆற்றை கடக்காமல் செல்ல வேண்டுமென்றால் 8 முதல் 10 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டும். சாதாரண நாட்களில் முழங்கால் அளவே தண்ணீர் செல்வது வழக்கம். தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கழுத்தளவு தண்ணீர் செல்வதால், விவசாயிகள் பரிசலில் விளைபொருட்களை ஏற்றி அக்கரைக்கு கொண்டு செல்கின்றனர். மழைக்காலங்களில் சிரமமடைவதால் வராக நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

* மரம் விழுந்ததில் படகு இல்லம் சேதம்
கொடைக்கானலில் நேற்று காலை முதலே  சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி அருகே ராட்சத  மரம் ஒன்று நடைபாதை மீது விழுந்ததில் அருகில் உள்ள படகு இல்லம்  சேதமடைந்தது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. விக்கிரமங்கலம் கண்மாய் நிரம்பி கரைகள் உடைந்து, 500 ஏக்கர் நெற்பயிர் நீருக்குள் மூழ்கின.

* டெல்டாவில் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் மீண்டும் மூழ்கியது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இனியானூர், தீரன் நகரில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மருங்காபுரி ஒன்றியம் வேம்பனூர் பெரியகுளம் 12 ஆண்டுக்கு பிறகு நிறைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. உறையூர் லிங்கா நகரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தவித்த 50 பேரை பரிசல் மூலம் மீட்டனர். தொடர் மழையால், டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே தேங்கியிருந்த தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றியநிலையில் கடந்த 2 நாட்களாக மழை தொடர்ந்ததால் வயல்கள் ஆறுபோல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடலில் பலத்த காற்று வீசியதால் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 2 லட்சம் பேர் 3வது நாளாக நேற்றும் கடலுக்கு செல்லவில்லை.

Tags : Nellai district ,Tamiraparani ,Thiruchendur , 2nd day of floods in Nellai district due to continuous rains: Ground bridges submerged, Thiruchendur road cut off
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...