மகளிர் காவல் நிலையத்தில் புகுந்த மழைநீர்

பூந்தமல்லி: கனமழையால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. இதனை போலீசார் சிரமத்துடன் செல்கின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், வளசரவாக்கம், திருவேற்காடு, வானகரம் உள்ளிட்ட பல இடங்களில் இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த வாரம் பெய்த மழையால் தேங்கிய மழைநீர் வடியும் முன்பே பல இடங்களில் மீண்டும் பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. பூந்தமல்லி அம்மன் நகர், எம்.ஜி.ஆர்.குட்டை, லட்சுமிபுரம், பனையாத்தம்மன் நகர் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் வீடுகளிலிருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் கோயில் தெருவில் செயல்பட்டு வரும் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் அதன் வளாகத்திலேயே உள்ள போலீஸ் குடியிருப்புகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளது. காவல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் போலீசார் மழைநீரிலேயே நின்றபடி வழக்குகளை விசாரித்து வருகின்றனர். மேலும் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் நனையாமல் இருப்பதற்காக பாதுகாப்பாக உயரமான இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் பகுதியில் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக வருபவர்களை தண்ணீர் அதிகளவில் தேங்கி இருப்பதால் தண்ணீர் வடிந்த பிறகு விசாரணைக்கு வரவேண்டும் என போலீசார் திருப்பி அனுப்பிவருகின்றனர். தற்போது மழைநீருடன் கழிவுநீரும் அதிக அளவில் கலந்துள்ளதால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார், நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் மழைநீர் தேங்கிய காவல் நிலையம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து, மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: