ராமாபுரம், தண்ணீர்குளம் கிராமங்களில் மழைநீரை அகற்றகோரி மக்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தண்ணீர்குளம், ராமாபுரம் கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை அகற்ற ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், ராமாபுரம் மற்றும் தண்ணீர்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற வலியுறுத்தி நேற்று காலை திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வீடுகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வெள்ளத்தை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். போலீசாரின் உறுதியை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

* கால்வாய் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் மறியல்

ஆவடி அடுத்த சோராஞ்சேரியில் உள்ள ஈசா  ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயை தனியார் பள்ளி, செங்கல்சூளை, தனியார் வீட்டு மனைப்பிரிவு ஆகியவை ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பருவமழையால் ஏரி முழுமையாக நிறையவில்லை. இதனால் கோடைகாலத்தில் நிலத்தடி நீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் தொடர்மழையால் ஈசா ஏரியின் கால்பகுதி மட்டும் நிரம்பியுள்ளது. நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் முழுமையாக கூவம் ஆற்றை சென்றடைகிறது.

இந்நிலையில், கால்வாயில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்றகோரி நேற்று மாலை அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர்  பருத்திப்பட்டு - அனைக்கட்டுச்சேரி சாலை சத்தியா நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேஷன், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரி ஷகிலா பேகம், பொதுப்பணித்துறை அலுவலர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

Related Stories: