போதை மறுவாழ்வு மையத்தில் தகராறு காஸ் சிலிண்டரால் தாக்கி ஆந்திர வாலிபர் கொலை: 4 பேர் கைது

புழல்: செங்குன்றத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் காஸ் சிலிண்டரால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, போலீசார்  4 பேரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் வம்சி(21). இவர் போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் முதல் செங்குன்றம் அருகே தண்டல்கழனி விஜயநகர் மூவேந்தர் தெருவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.

இங்கு தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து போதை பழக்கத்திற்கு அடிமையான 40க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த மையத்தின் வளாகத்தில் வம்சி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், முகத்தில் படுகாயத்துடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தார். இது தொடர்பாக, மறுவாழ்வு மையத்தின் நிர்வாகிகள் செங்குன்றம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வம்சியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவத்தன்று இங்கு சிகிச்சை பெற்றுவரும் கும்மிடிப்பூண்டி பில்லாகுப்பத்தை சேர்ந்த தேவராஜ்(19), செங்குன்றம் அம்பேத்கர் நகரை சேர்ந்த யாசின் செரிப்(36), வியாசர்பாடி கக்கன் காலனியை சேர்ந்த கேசவன்(19), பட்டாபிராம் வள்ளலார் நகரை சேர்ந்த பெனிஹின்(22) ஆகியோருக்கும், வம்சிக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒன்றாக சேர்ந்து வம்சியின் கழுத்தை நெரித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் மையத்தில் இருந்த காஸ் சிலிண்டரால் தாக்கி வம்சியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் இரவு புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More