×

தொடர்ந்து பெய்யும் கனமழை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு: வீடுகளில் முடங்கிய மக்களை பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாள்முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் நிரம்பி கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது.
கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழையால். காஞ்சிபுரத்தின் அனைத்து சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. செவிலிமேடு, தாண்டவராய நகர், முல்லை நகர், மின்நகர், ஓரிக்கை, ஜெம் நகர் உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, திம்மசமுத்திரம் ஊராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 344 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 35 ஏரிகள் 70 சதவீதமும், ஒரு ஏரி 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 506 ஏரிகள் நிரம்பி வழிகிறது. 22 ஏரிகள் 70 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன. பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளான மாகரல், திருமுக்கூடல் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி நீர்வீழ்ச்சிபோல் உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 520 ஏரிகள் முழுமையாக நிரம்பின. பல ஏரிகள் உடையும் அபாய நிலையில் உள்ளன. இதையொட்டி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே, இடுப்பளவு தண்ணீர் செல்கிறது. இதில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. பல வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. செங்கல்பட்டு அடுத்த ஜோதிபா நகர் நியூ காலனியில் இடுப்பளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் அவதியடைந்தனர்.

இதையறிந்த, பேரிடர் மீட்பு குழுவினர் அங்கருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் நீஞ்சல் மடு அணையில் நீர் நிரம்பி அதன் கரை உடைந்ததால், மகாலட்சுமி நகரில் உள்ள 300 வீடுகள் நீரில் மூழ்கின.
செங்கல்பட்டு நகராட்சியில் மையப்பகுதியில் உள்ள குண்டூர் ஏரி முழுவதும் நிரம்பி, உபரிநீர் வெளியேறியதால், வேதாசலம் நகர், ஜிஎஸ்டி சாலையில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தின் பல கிராமங்களில் அனைத்து கால்வாய்களும், ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் விவசாய நிலங்களின் வழியாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கொண்டங்கி ஏரி மற்றும் நெல்லிக்குப்பம் ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீரால் வெண்பேடு, காட்டூர், இள்ளலூர் கிராம வயல்கள் நீரில் மூழ்கின. திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து இள்ளலூர் சந்திப்பு வரை ஓஎம்ஆர் சாலையில் பல இடங்களில் மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தையூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன் ஆகியோர் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர்.

பஞ்சந்தீர்த்தி கிராமத்தில் ஜீவா நகர், ஜெகதீஷ் நகர் பகுதியில் உள்ள 48 இருளர் குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து 48 குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அருகில் இருந்த சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. மேலும் பெரியார் நகர், குயில் குப்பம் பகுதியில் இருந்த இருளர் பழங்குடியினர் பள்ளிக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். புறநகர் பகுதியான தாழம்பூரில் ஏரி நீர் வழிந்து வெளியேறுவதால் பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதையொட்டி, அப்பகுதியில் படகுகள், டிராக்டர்கள் மூலம் மக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. அங்கிருந்து வெளியே செல்பவர் களும், உள்ளே வருபவர்களும் படகுகளையே பயன்படுத்தினர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் சாவடி ஏரி முழு கொள்ளளவை எட்டியது. தொடர் மழை காரணமாக ஏரி கரையின் ஒரு பகுதியில் திடீர் அரிப்பு ஏற்பட்டு உடைந்தது. ஏரியில் இருந்து தண்ணிர் வெளியேறியது. தகவலறிந்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று 60க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக உடைப்பை சரி செய்தனர். அதேபோல், குழிப்பாந்தண்டலம் கிராமம் திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் மழைநீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கியது. இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி மழையளவு நிலவரம் (மிமீ)
காஞ்சிபுரம்    121.40
ஸ்ரீபெரும்புதூர்    102.20
உத்திரமேரூர்    90.00
வாலாஜாபாத்    73.80
செம்பரம்பாக்கம்    120.40
குன்றத்தூர்    125.40

* அரசு மருத்துவமனையில் புகுந்த மழைநீர்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, செய்யூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் அரை அடிக்கு சூழ்ந்தது. தொடர்ந்து மழை பெய்ததால், மருத்துவமனையில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து, மருத்துவ நிர்வாகத்தினர், அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 20க்கும் மேற்பட்டோரை, நேற்று காலை செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இதையறிந்ததும், பனையூர் பாபு எம்ஏல்ஏ, அங்கு நேரில் பார்வையிட்டார். பின்னர்,  வருவாய் துறை அதிகாரிகள் உதவியுடன் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார்.

* கலெக்டர் எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் அடையாறு வடிநில பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தற்போது பெய்யும் மழைநீர் அனைத்தும் உபரி நீராகவே அடையாற்றின் கிளை ஆறுகளான ஒரத்தூர் ஓடை, சோமங்கலம் ஓடை, மணிமங்கலம் ஓடை, ஆதனூர் ஓடை ஆகிய ஓடைகளின் மூலம் அடையாற்றில் கலக்கிறது. இந்த வெள்ள நீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடையாறு கரையோரம் அமைந்துள்ள வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர். அமுதம் நகர் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான குடியிருப்புகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Tiruchi ,NH , Heavy rains continue to cut off Chennai-Trichy National Highway: Rescue team rescues paralyzed people
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு