வேலூர் ஜமாதி அருவியில் இருந்து கப் அண்ட் சாசர் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் தொடங்கியது

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி குருதோப்பு பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-1, பகுதி-2 மற்றும் அங்குள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 3.25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கப் அண்ட் சாசர் வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஜமாதி மலையில் உள்ள அருவியில் இருந்து வரும் நீரை சுத்திகரித்து, மின்மோட்டார் உதவியின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பைப் லைன்கள் பராமரிப்பின்றி உடைந்து போனது. இதனால் ஜமாதி அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சி 2வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தலைமையில், தற்காலிகமாக பைப்லைன் அமைக்கப்பட்டு கப் அண்ட் சாசர் நீர்த்தேக்க தொட்டியில் இணைக்கும் பணி நேற்று முடிவடைந்தது. இதையடுத்து அருவியில் இருந்து கொட்டும் தண்ணிர் கப் அண்ட் சாசர் தொட்டிக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 2 மணி நேரத்தில் இந்த தொட்டி நிரம்பியது. உடனடியாக தண்ணீர் குளோரினேசன் செய்யப்பட்டு பகுதி-1, பகுதி-2ல் அடங்கிய 23, 24வது வார்டுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. இப்பணியை நேற்று மாலை உதவி ஆணையர் மதிவாணன் தொடங்கி வைத்தார்.  

இதுகுறித்து உதவி ஆணையர் மதிவாணன் கூறுகையில், இரு வார்டுகளிலும் மாலை 5.45 மணி அளவில் இருந்து இரவிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  தொடர்ந்து இதேபோல் இந்த நீர்வீழ்ச்சி நீரை ரங்காபுரத்தில் உள்ள 19, 20வது வார்டுகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  2 நாட்களில் அவர்களுக்கும் இந்த குடிநீர் வழங்கப்படும். நீர்வீழ்ச்சி தண்ணீர் வீணாக கால்வாயில் செல்வதால் தற்போது 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என்றார்.

Related Stories: