குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்: விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், போக்சோ சட்டம் செயல்பாடு குறித்து தமிழகம் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு புள்ளி விவரங்கள், போக்சோ சட்டப்படி புகார் பதிவு செய்வது மிகவும் எளிமையாக்குதல், இச்சட்டத்தில் பல்வேறு விதமான பாலியல் குற்றச்செயல்கள் வரையறுக்கப்பட்டபடி அனைத்து குற்றங்களையும் சம நோக்குடன் தீவிரமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுதல் ஆகியன குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு தனியாக இழப்பீட்டு நிதியை உருவாக்கி இதுவரை 148 குழந்தைகளுக்கு ரூ.1,99,95,000 முதற்கட்டமாக வழங்கியுள்ளது குறித்தும், அடுத்தக்கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இழப்பீடுகள் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். தடயவியல் ஆய்வு அறிக்கைகள் விரைந்து கிடைக்க ஏதுவாக அதற்கான தடயவியல் ஆய்வகங்களின் எண்ணிக்கை மற்றும் இதர உள்கட்டமைப்புகள் கூடுதலாக அமைக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தொலைதூர இடங்களுக்கு சென்று விசாரணை செய்ய நடமாடும் விசாரணை பிரிவு (காவல் வாகனம்) செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், சென்னையில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இதுவரை 3,672 குழந்தைகள் ஆபாசப் படங்கள் தொடர்புடைய கணினி தகவல்கள் பெறப்பட்டு, இதுவரை 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 191 விசாரணைக்கு தகுதியான மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய கல்வி தகவல் மையத்தின் (14417)  மூலம் உளவியல் பயிற்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு மாணவர்களுக்கு ஆலோசணை வழங்கும் மையமாக செயல்பட்டு வருகிறது. அதேபோன்று, ஒவ்வொரு வகுப்பறையிலும் 1098 சிறார் உதவி எண் குறித்த விவரங்கள் ஒட்டப்பட்டு, வரும் கல்வி ஆண்டிலிருந்து இவ்விவரங்கள் அனைத்து பாடப் புத்தகங்களிலும் அச்சிடப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதை துரிதப்படுத்துமாறும், மேற்படி வழக்குகளில் காவல் துறையினர் துரிதமாக முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்வதுடன் இவ்வழக்குகளை விரைவாக முடிவு செய்து, பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவதை உறுதி செய்யுமாறும், சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகள், மருத்துவ உதவிகள், தொடர் கண்காணிப்பு, சட்ட உதவி, ஆகியவை முற்றிலும் குழந்தை நேய சூழலில் வழங்கிட அறிவுறுத்தினார்கள்.

மேலும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து  துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால்,

இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) திரு.கே.வன்னியபெருமாள், இ.கா.ப.,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில் குமார், இ.ஆ.ப., சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் திருமதி எஸ். வளர்மதி, இ.ஆ.ப., சட்டத் துறை (சட்ட விவகாரங்கள்) செயலாளர் திரு.பா. கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: