×

இரவு 12 மணிக்கு ஆவி பறக்கும் இட்லி!

நன்றி குங்குமம் தோழி

சென்னை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலை செல்லும் வழியில் ‘அக்கா இட்லி கடை’ன்னு யாரிடம் கேட்டாலும் அதற்கான வழியினை சுலபமாக காட்டுகிறார்கள். அவர்கள் சொன்ன வழியில் செல்லும் போது கடையின் பத்தடிக்கு முன்பே ஆவியில் இட்லி வேகும் வாசனை நம் நாசினை வருட செய்கிறது. கடையின் வாசலில் இட்லி அவித்துக் கொண்டு இருந்தார் சரண்யா. அவரின் கணவர் குமார் சாம்பார், சட்னி மற்றும் குருமாவிற்கு தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தார். 50 இட்லிகளை வேகவைக்கும் மெகா சைஸ் பாத்திரத்தில் மல்லிகைப்பூ
இட்லியை வேகவைத்துக் கொண்டே நம்மிடம் பேசத் துவங்கினார் சரண்யா.

‘‘நான் பிறந்தது வளர்ந்து படிச்சது எல்லாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகரல் என்ற கிராமம். என் கணவர் எனக்கு அத்தை மகன் என்பதால், அவருடைய பூர்வீகமும் அது தான். எங்களுடையது விவசாய குடும்பம். எனக்கு உடன் பிறந்தவங்க ஒரு அண்ணன் மற்றும் தங்கை. இன்றும் அங்கு அம்மா, அப்பா எல்லாரும் விவசாயம் தான் செய்திட்டு இருக்காங்க. நான் பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சேன். அதற்கு மேல் படிக்க ஆர்வம் ஏற்படல. அதனால வீட்டில் அம்மாக்கு உதவியா சமையல் வேலை செய்றது. அப்புறம் விவசாய நிலத்தை பார்த்துக் கொள்வதுன்னு எல்லா வேலையும் செய்வேன். அப்படித்தான் சமைக்கவும் கற்றுக் கொண்டேன்.

நான் மட்டும் இல்லை வீட்டில் இருக்கிற எல்லாருமே எல்லா வேலையும் பார்ப்போம். அதன் பிறகு 19 வயதில் எனக்கு திருமணமாச்சு. என் கணவரோ சென்னையில் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். அதனால் நான் திருமணத்திற்கு பிறகு 2005ம் ஆண்டு சென்னையில்
வந்து செட்டிலஆயிட்டேன். எல்லா பெண்களையும் போல, நானும் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை, குடும்பம்ன்னு செட்டிலாயிட்டேன். சென்னை வாழ்க்கை கொஞ்சம் விலைவாசியை பொறுத்தவரை எங்க கிராமத்தை விட அதிகம் தான். அதனால் பசங்க ஸ்கூலுக்கு போன பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் ஏதாவது வேலை செய்யலாம்ன்னு நினைச்சேன். என்னால் வெளியே வேலைக்கு போக முடியாது. அதனால் வீட்டில் இருந்தபடியே தோசை மற்றும் இட்லி மாவு அரைத்து விற்பனை செய்யலாம்ன்னு முடிவு செய்தேன்.

என் யோசனையை என் கணவரிடம் சொல்ல அவரும் ஆமோதிக்க, முதலில் இட்லி மாவு பிசினஸ் தான் ஆரம்பிச்சோம். அதை கடைகளில் கொண்டு விற்பனை செய்து வந்தோம். சிலர் எங்களிடமே வந்து வாங்கி செல்வாங்க. ஆனால் அதில் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியவில்லை. அதனால் இட்லி மாவுக்கு பதில் டிபன் கடை போட்டா என்னென்னு எனக்கு யோசனை வந்தது. என் கணவருக்கும் அது நல்லதா பட்டுது. நல்ல தரமான உணவு கொடுத்தா சாப்பிட வருவாங்கன்னு தோணுச்சு. ஆனால் வீட்டில் சொன்ன போது, யாரும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எல்லாரும் எங்களை திட்டினாங்க. அது என்ன தெருவில் இட்லி கடை போடுறதுன்னு. சரின்னு நானும் அந்த யோசனையை கைவிட்டுட்டேன். ஆனால் அவரின் ஒரு சம்பாத்தியம் வைத்து என்னால் இங்கு குடும்பம் நடத்த முடியவில்லை.

அதனால் டிபன் கடையை ஆரம்பிக்கலாம்னு நானும் என் கணவரும் இணைந்து பேசி முடிவு செய்தோம்’’ என்றவர் தன் தங்கையின் நகையினை அடமானம் வைத்துதான் கடையை திறந்துள்ளார். ‘‘நாங்க குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு சின்ன டிபன் கடை இருந்தது. அவங்க அந்த கடையை காலி செய்திட்டாங்க. அந்த இடத்தில் ஆரம்பிக்க முடிவு செய்தோம். அது சின்ன இடம் தான். இரண்டு பேர் தான் நிக்க முடியும். சமைக்க வசதி எல்லாம் கிடையாது. அதனால் காலையில் டிபன் உணவுகளா இட்லி, வடை, பொங்கல் எல்லாம் வீட்டில் இருந்தே செய்து கொண்டு வந்திடுவேன். இங்க சாப்பிடவும் இடம் இல்லை என்பதால், பெரும்பாலும் பார்சல் தான் வாங்கிக் கொண்டு போவாங்க. கடையை நான் தான் முழுமையா பார்த்துக் கொண்டு இருந்தேன்.

அவர் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கி தருவதும், காலையில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி தருவது, பசங்கள ஸ்கூலுக்கு விடுவதுன்னு பார்த்துக் கொள்வார். இந்த வேலை எல்லாம் முடிச்சிட்டு அவர் தன்னுடைய வேலைக்கு செல்வார். ஒரு கட்டத்தில் என்னால் தனியாக எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லை. அதனால் அவர் வேலையை விட்டுவிட்டு முழுமையா இதில் இறங்கிட்டார். இப்ப நாங்க இருவரும்தான் இந்த கடையை நடத்தி வருகிறோம்’’ என்றவர் தன் கடைக்காக வாங்கின கடன் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அடைத்து விட்டார்.

‘‘காலையில் பூரி, பொங்கல், இட்லி, தோசை, வடைன்னு போட்டு வந்தோம். கடை ஆரம்பிச்ச போது என் தங்கையிடம் வாங்கின கடனை எப்படியாவது திருப்பி தரணும்ன்னு வைராக்கியத்துடன் தான் இருவரும் உழைச்சோம். அதனால் தான் இரவு நேரமும் டிபன் போட ஆரம்பிச்சோம். காலை ஏழு மணிக்கு ஆரம்பிச்சா, 11 மணி வரை காலை நேர டிபன் ஓடும். அதன் பிறகு நானும் சரி என் கணவரும் சரி இருவரும் வீட்டில் சும்மா தான் இருப்போம். எந்த வேலையும் இல்லை என்பதால் எங்களுக்கு நேரத்தை அநாவசியமாக செலவு செய்வது போல் தோன்றியது. அது மட்டும் இல்லை. காலையில் வரும் சம்பாத்தியம், கடைக்கு தேவையான பொருட்கள் மற்றும் கடைக்கான வாடகை, கடன் அடைப்பதற்கே சரியாக இருந்தது. சேமித்து வைக்க முடியல. அதனால் தான் மாலையிலும் கடை போட ஆரம்பிச்சோம்.

இரவு இட்லி, முட்டை தோசை, சப்பாத்தி குருமா, பொடி தோசை, வெங்காய தோசைன்னு போடுறோம். எல்லாவற்றையும் விட இங்கு இட்லி தான் அதிகமாக விற்பனையாகும். ஒரு வேக்காட்டில் 50 இட்லி எடுப்பேன். அதை பாத்திரத்தில் இருந்து எடுத்த அடுத்த நிமிடமே 50தும் காலியாகிடும். காரணம், நாங்க இட்லி மாவில் எந்த ஒரு கலப்படமும் சேர்ப்பதில்லை. நம் வீட்டில் எப்படி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து அரைக்கிறாங்களோ அப்படித்தான் அரைக்கிறோம். மேலும் சப்பாத்திக் கூட நாங்க சுட்டு வைப்பதில்லை. கேட்கும் போது அப்போதுதான் சுட்டுத் தருவோம். அதனால் நிறைய பேர் விரும்பி சாப்பிட வராங்க’’ என்றவர் கடை ஆரம்பித்த முதல் நாள் 100 ரூபாய்க்கு தான் விற்பனை நடந்ததாம்.


‘‘முதல் நாள் ரூ.100 தான் வியாபாரம் நடந்தது. தரமான, சுவையான சாப்பாடு கொடுத்தா கண்டிப்பா மக்கள் தேடி வருவாங்கன்னு என் கணவர் தான் எனக்கு ஊக்கமளித்தார். அதற்கான பலனும் இப்ப அடைந்திருக்கோம். சமையல் பொறுத்தவரை நான் மட்டும் தான் செய்றேன். தனியா ஆட்கள் யாரும் கிடையாது. மாலை நேரம் மட்டும் என் நாத்தனார் உதவிக்கு வருவாங்க. அவங்க தான் சப்பாத்தி திரட்டி தருவாங்க. என்னைப் பொறுத்தவரை என் பசங்களுக்கு நல்ல படிப்பு, அப்புறம் சொந்தமா ஒரு வீடு. அவ்வளவு தான். கடன் வாங்காம அகலக்கால் வைக்காம இருந்தாலே போதும். நிலையான வாழ்க்கையை வாழமுடியும்.

கடை நல்லா போக ஆரம்பிச்சதும், கொஞ்சம் காசு சேர்த்து வைத்து நகை வாங்கி இருக்கேன். அப்புறம் ரூ.50 ஆயிரத்துக்கு சீட்டு கட்டினேன். அதில் முதலில் என் தங்கையின் நகையை மீட்டுக் கொடுத்தேன். அதன் பிறகு மறுபடியும் சீட்டு போட்டு, வீட்டுக்கு மற்றும் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கினேன். நாங்க கடை ஆரம்பிச்ச போது சாப்பிட வருபவர்களுக்கான தட்டு மட்டும் தான் வாங்கினேன். மத்தபடி என் வீட்டில் உள்ள சாமான்களை கொண்டு தான் சமாளித்தேன். இப்ப என் கடைக்கு அருகே இருக்கும் இடத்தையும் வாடகை–்கு எடுத்திருப்பதால், இங்கேயே சமைக்கிறோம்’’ என்றவர் தன் ஊரில் சொந்தமா ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்.

‘‘என்னைப் பொறுத்தவரை கடன் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்தணும். அதனால் தான் வீடு கூட பொறுமையா கட்டிக் கொண்டு வருகிறோம். கையில் காசு சேர சேர வீட்டைக் கட்டிக் கொண்டு வருகிறோம். பெரிய அளவில் ரெஸ்டாரென்ட் வச்சா இந்த சுவையை கொண்டு வர முடியுமான்னு தெரியல. பெரிய அளவில் செய்யும் போது, ஆட்களை வேலைக்கு வைக்கணும். அவங்க சரியா வரணும். இப்படி நிறைய சிக்கல் இருக்கு. அதனால் இப்போதைக்கு, எங்களால் முடியும் வரை நாங்களே கடையை பார்த்துக் கொள்ளலாம்ன்னு இருக்கிறோம்’’ என்றார் சரண்யா.

தொகுப்பு: ப்ரியா

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!