×

நெல்லை, தூத்துக்குடியை புரட்டிப் போட்ட கனமழை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

* 2வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 700க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சம்

நெல்லை : நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொட்டிய கன மழையால்  தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில்  வெள்ளம் சூழ்ந்ததால் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய  தமிழக கடலோரத்தில் நீடித்து வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றின்  திசை மாறுபாடு காரணமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை என  சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் தெற்கு வங்கக் கடல்  பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு  நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை முதல்  மிக கனமழை பெய்யக்  கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி  மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி  வரை இடைவிடாமல் நீடித்த கன மழை சற்று வேகம் தணிந்தாலும், தூறல் மழையாக  விடியவிடிய நேற்று காலை வரை நீடித்தது.  நேற்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 306 மிமீ மழை பதிவானது.  

தூத்துக்குடியில் 266 மிமீ,  திருச்செந்தூரில் 248 மிமீ மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் வரலாறு காணாத அளவில் தண்ணீர்  புகுந்த நிலையில், இரவோடு இரவாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து நே ற்று காலை முதல் வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி  மாநகரில் தற்காலிக பஸ் நிலையம், தருவை விளையாட்டு மைதானம் ஆகியவை  தண்ணீரில் மிதக்கின்றன. இவை தவிர தூத்துக்குடி டூவிபுரம், தாளமுத்துநகர்,  சத்யாநகர், கால்டுவெல் காலனி, பூபாலராயர்புரம் உள்ளிட்ட பகுதிகளில்  வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி ராஜபாண்டி நகர், காந்திநகர்  பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் அங்குள்ள நிவாரண மையங்களான ஸ்காட் பள்ளி  மற்றும், இந்து அருந்ததியர் நடுநிலைப்பள்ளி ஆகிய மையங்களில் 250 பேர் தங்க  வைக்கப்பட்டனர்.

இதுபோல் திருச்செந்தூர், வைகுண்டம், சாத்தான்குளம்,  எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாக்களுக்குட்பட்ட இடங்களில் மழை வெள்ளம்  வீடுகளை சூழ்ந்ததால் 147 குடும்பங்களைச் சேர்ந்த 99 குழந்தைகள் உள்பட 449  பேர் 14 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் வரண்டியவேல் அருகே வெள்ள நீர் ஓடியதால் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ரெட் அலர்ட் நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையில் கனமழை கொட்டியதால் பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்கள் நெல்லை மேலக்கல்லூர் ஆதிதிராவிடர் விடுதியில் 124 பேரும, சீவலப்பேரி சாலையில் உள்ள அந்தோணியார் கோயில் திருமண மண்டபத்தில் 30 பேரும், குன்னத்தூர் இந்து நடுநிலைப் பள்ளியில் 6 பேரும், பாப்பான்குளம் புஷ்பா அரங்கத்தில் 6 பேரும் என மொத்தம் 173 பேர் 4 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கன மழை காரணமாக  தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் நெல்லை குறுக்குத்துறை  முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தைப்பூச மண்டபம், உள்ளிட்ட ஏராளமான  பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாமிரபரணியின் இரு கரைகளையும்  தொட்டுக் கொண்டு வெள்ளம் ஓடுகிறது. நேற்று மாலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 25 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் ஓடியது. இத்துடன் சிற்றாற்று வெள்ளமும் கலப்பதால் தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டான வைகுண்டம் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீருக்கு மேல் வீணாக கடலுக்கு  செல்கிறது.

தென்காசி  மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மொத்தம் உள்ள 466 குளங்களில் 403 குளங்கள்  நிரம்பின. மேலும் செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தூறல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில்  அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து விழுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு மேல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி  மாவட்டங்களில் குறிப்பிடும் அளவிற்கு மழை இல்லை. இதனால் மழை நீர் வடிந்து வருகிறது. எனினும் தூத்துக்குடி மாவட்டத்தில் ரெட் அலர்ட் நீடிப்பதால் 2வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல நெல்லை மாவட்டத்திலும் கன மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். மழை, வெள்ள நிலவரத்தை கண்காணிக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வருவாய் துறையினர், உள்ளாட்சி துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் குளங்களை பொதுப்பணித் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Tags : Nellai ,Thoothukudi ,Tamiraparani river , Thamirabharani, Flood, Heavy rain,
× RELATED நெல்லையில் பிரதமர் மோடி இன்று பரப்புரை