பெரியகுளம் பகுதியில் தொடர் மழை கும்பக்கரையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

*கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெரியகுளம் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததால், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்தது.

 இந்நிலையில் கும்பக்கரைக்கு மேல் உள்ள மற்றும் வட்டக்கான்ல், கொடைக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள கண்மாய்கள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பியுள்ளதால், கும்பக்கரை அருவியில் வரும் நீர் அப்படியே பாம்பாற்றிற்கு சென்று வராக நதி ஆற்றில் கலந்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த மழையின் காரணமாக சோத்துப்பாறை அணை, கல்லாறு, கும்பக்கரை, செலும்பாறு உள்ளிட்ட ஆறுகளில் அதிக அளவில் நீர் வரத்து அதிகரித்ததால் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 வராக நதியில் தற்பொழுது 1000 கன அடிக்கு மேல் நீர் செல்வதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் வராக நதி ஆற்றங்கரையோரம் உள்ள வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: