என்.எல்.சி. உட்பட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 60 பேரிடம் ரூ.4 கோடிக்குமேல் மோசடி செய்த தம்பதி கைது: புகார்கள் குவிவதால் 5 நாள் காவலில் எடுக்க முடிவு; மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: கல்வித்துறையில் ஆசிரியர் பணி என அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 60 பேரிடம் ரூ.4 கோடிக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தம்பதி மீது புகார்கள் குவிந்து வருவதால் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காந்தா (42) என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், எனது மகனுக்கு விமான நிலையத்தில் அதிகாலை வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சத்தை கடந்த 2019ம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சசிபிரியா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரபாபு ஆகியோர் பெற்றனர். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டால் தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின்படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மத்திய  குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார்  மீது விசாரணை நடத்தினர். அதில், சசிபிரியா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரபாபு ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை ஆழ்வார்திருநகர் வீரப்பா நகர் அனெக்ஸ் பகுதியில் மாஸ் மேன் பவர் என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி கல்வித்துறையில் ஆசிரியர் பணி, என்எல்சி நிறுவனத்தில் கான்ட்ராக்டர், இன்ஜினியர் வேலை, சுகாதாரத்துறையில் செவிலியர் வேலை, நீதிமன்றத்தில் ஓஏ, ஜெஏ பணிகள், விமான நிலையத்தில் அதிகாரி வேலை, மின்சார துறையில் ஓஏ, இணை பொறியாளர், இளநிலை பொறியாளர் பணி, அறநிலையத்துறையில் வேலை என பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 60க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.16.32 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததும், அதோடு இல்லாமல் நீதிமன்றத்தில் வேலை என 7 பேரிடம் ரூ.40 லட்சம் வரை பணம் வாங்கி மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து வேலைவாய்ப்பு நிறுவனம் பெயரில் 60க்கும் மேற்பட்டோரிடம் ரூ.4 கோடிக்கு மேல் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட வளசரவாக்கத்தை சேர்ந்த சசிபிரியா (43), அவரது கணவர் ரவிச்சந்திரபாபு (51) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வடபழனியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரையுடன் கூடிய கடிதங்கள், போலியான பணி நியமன ஆணைகள், 1 லேப்டாப், 10 செல்போன்கள், ஒரு டேப்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட தம்பதிகள் மீது புகார்கள் குவிந்து வருவதாக 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: