ரூ.1302 கோடியில் 15.60 லட்சம் தணிக்கை மறுப்புகள் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த தணிக்கை பிரிவு நிதித்துறையின் கட்டுப்பாட்டில் தனித்துறையாக இயங்கும்: தமிழக அரசு உத்தரவு

சென்ைன: அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருந்த தணிக்கை பிரிவு நிதித்துறையின் கட்டுபாட்டில் தனித்துறையாக செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கோயில்களின் தணிக்கைக்கென இந்து சமய அறநிலையத்துறை ஆணையரது கட்டுப்பாட்டின் கீழ் இந்து சமய அறநிலையத்துறையின் தணிக்கைப் பிரிவானது உள்ளாட்சி நிதி தணிக்கை துறையிலிருந்து பிரித்து, ஏற்படுத்தப்பட்டது. தற்போது சமய அறநிறுவனங்களின் தணிக்கையினை மேற்கொள்ள தணிக்கைப் பிரிவானது 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 4 துணைத் தலைமை தணிக்கை அலுவலர் அலுவலகங்களும், 15 மண்டல தணிக்கை அலுவலர் அலுவலகங்களும் இவர்களுக்கு உதவியாக 27 உதவி தணிக்கை அலுவலர் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது.

தணிக்கை மற்றும் ேமலாய்வு பணிகளை மேற்கொள்ள 295 தணிக்கை பணியிடங்களில் தணிக்கை பிரிவின் அலுவலக பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர்த்து உள்ள 274 தணிக்கை பணியிடங்களில் காலி பணியிடங்கள் போக 235 தணிக்கை பணியாளர்கள் தணிக்கை பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் தணிக்கையாளர்களைக் கொண்டு கோயில்களின் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கைகள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு செய்யப்பட வேண்டிய தணிக்கை தடைகள் கடந்த 31.3.2021 அன்று நிலவரப்படி ரூ.1302 கோடி உள்ளடக்கிய 15,60,574 தணிக்கை மறுப்புகள் தீர்வு செய்யப்படாமல் நிலுவையாக உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையரது கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகப் பிரிவு மற்றும் தணிக்கைப் பிரிவுகள் செயல்பட்டு வருவதால், தணிக்கைப் பணி தனித்துவமாக நடைபெறவில்லை. இந்து சமய அறநிலையத்துறை தணிக்கைப்பிரிவினை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, தணிக்கைப் பணி மேற்கொள்வதுடன் தணிக்கைத் தடைகள் மீது அளிக்கப்படும் பதிலறிக்கைகள் பரிசீலித்து, இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை பிரிவினை விடுவித்து தனியாக அறநிலையங்களின் தணிக்கைத் துறை ஒன்றினை நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வகையில் ஏற்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள தணிக்கை பிரிவினை நிதித்துறையின் கீழ் செயல்படும் தனித்துறையாக்கும் பட்சத்தில் மேற்கண்ட சட்ட விதிகளுக்கு திருத்தம் மேற்கொள்ள தனியாக அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்படவுள்ளது. இந்து சமய அறநிறுவனங்களில் தணிக்கை மேற்கொள்வதற்கு அறநிலையய கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 92(2)ன்படி உரிய விகிதத்தில் தணிக்கை கட்டணங்கள் சம்பந்தப்பட்ட அறநிறுவனங்களால் அரசுக்கு ஈடுசெய்யப்படும் என்ற விவரமும் இதனால், அரசுக்கு கூடுதல் செலவினங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.  

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரது செயல்குறிப்பினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர், கோயில்களின் தணிக்கைக்கென இந்து சமய உள்ளாட்சி தணிக்கை துறையிலிருந்து பிரித்து தோற்றுவிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கான தணிக்கை பிரிவினை அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருந்து விடுவித்து, அறநிலையங்களின் தணிக்கை துறை ஒன்றினை நிதித்துறையின் கட்டுபாட்டின் கீழ் தனித்துறையாக செயல்படும் வகையில் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More