டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் உருவப்படம் அச்சிட்டு விற்பனை: முதல்வர், அமைச்சருக்கு மக்கள் பாராட்டு

சென்னை: வெண்மை புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன் நூற்றாண்டு  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் ஆகியோருக்கு பொதுமக்கள், பால் முகவர்கள், விற்பனையாளர்கள் வரவேற்று  பாராட்டு தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம்  கோழிக்கோடு பகுதியை சேர்ந்த வர்கீஸ் குரியன், இந்திய வெண்மைப் புரட்சியின்  தந்தை என அழைக்கப்படுகிறார்.    குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக்  கூட்டமைப்பின் தலைவராக வர்கீஸ் இருந்துள்ளார். முதலில் கைரா மாவட்ட பால்  உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை மேம்படுத்திய அவர், கூட்டுறவு அமைப்பு  மூலம், அமுல் என்ற வணிகப்பெயருடன், பால் உணவுப்பொருட்கள் தயாரிக்கும்  முயற்சியில் ஈடுபட்டார்.

அமுல் மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும்  விரிவுபடுத்தி, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை மாபெரும் தேசிய  திட்டமாகவும் வெற்றிபெற வைத்தார்.  மேலும், கூட்டுறவு பால்  பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன், இந்தியாவின்  வெண்மை புரட்சியை வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால்  உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார். 2012-ம் ஆண்டு  செப்டம்பர் 9-ம் தேதி தனது 90-வது வயதில் மறைந்த வர்கீஸ் குரியனுக்கு, பத்ம  விருதுகள் உட்பட பல்வேறு உயரிய விருதுகள் வழங்கப்பட்டு  கவுரவிக்கப்பட்டார்.

 இந்நிலையில் வெண்மை  புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட 27 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படத்தை அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள்,  விற்பனையாளர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories:

More