எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டு தொடர நானே காரணம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

கோவை: எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டு தொடர நானே காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அதிமுக அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, விருப்ப மனுக்களை பெற்றார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நான் துணை நின்றேன். கடந்த 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர நானே காரணம். இதனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. எனது குடும்பத்தினர், நண்பர்கள் என பலரையும் விசாரணை என்ற பெயரில் தினமும் போலீஸ் அதிகாரிகள்  அலைக்கழிக்கிறார்கள்.

என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். கோவையில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Related Stories: