×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஆவணங்களை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: போலீஸ்காரர் ரகு கணேஷ் மனு தள்ளுபடி

புதுடெல்லி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இது சம்பந்தப்பட்ட பிரதான வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஐ.யின் விசாரணை ஆவணங்களை வழங்கும்படி, இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் போலீஸ்காரர் ரகு கணேஷ் உள்ளிட்ட போலீசார் தாக்கல் செய்த மனுவை கீழ் நீதிமன்றங்களும், உயர் நீதிமன்ற மதுரை கிளையும் தள்ளுபடி செய்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரகு கணேஷ் சில வாரங்களுக்கு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘இதுவரையில் எனக்கு வழக்கு தொடர்பாக எந்த ஒரு ஆவணங்களும் வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான், வழக்கை என்னால் எதிர்கொள்ள முடியும். இதில் பொய் சாட்சியங்களும், தவறான குற்றச்சாட்டுகளும் உள்ளன. எனவே, வழக்கு ஆவணங்களை வழக்கும்படி உத்தரவிட வேண்டும்,’ என்று கூறியிருந்தார்.  இதை விசாரித்து நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, பி.எம்.திரிவேதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ.யும், கூடுதல் அமர்வு நீதிமன்றமும் விரிவாக விசாரணை நடத்தி வரும் நிலையில், அது தொடர்பான ஆவணங்களை எப்படி வழங்க உத்தரவிட முடியும்? அவற்றை வைத்து சாட்சியங்களை கலைக்கும் முயற்சிகளில் கூட மனுதாரர் ஈடுபடலாம். எனவே, மனுதாரரின்  மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என தெரிவித்தனர்.

Tags : Sathankulam ,Supreme Court ,Raghu Ganesh , Satankulam, murder case, Supreme Court, denial
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...