×

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களுக்கு வலை: மம்தாவின் கணக்குதான் என்ன?: பாஜ.வின் பி டீமா? சோனியா காந்திக்கு சவாலா?

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 3வது முறையாக ஆட்சியை பிடித்தது முதல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், இம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியின் அரசியல் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மாநில அரசியல் என்ற நதியில் இருந்து விலகி, தேசிய அரசியல் என்ற கடலில் கொடி நாட்ட அவர் வியூகம் வகுத்து வருகிறார். அவருடைய சமீபத்திய செயல்பாடுகள் ஒவ்வொன்றும், அதை நிரூபித்து கொண்டிருக்கின்றன.  இதற்காக,  பாஜ.வை போலவே, இவரும் காங்கிரசை பலிகடாவாக்கிதான் பல்வேறு மாநிலங்களில் தனது கட்சியை பலப்படுத்தி கொண்டிருக்கிறார். இதுபோன்ற ‘கட்சி உடைப்பு’களை, இந்திரா காந்தியின் காலத்தில் இருந்தே  காங்கிரஸ் சந்தித்து கொண்டிருக்கிறது. இதனால், பலமுறை பலவீனப்பட்டு, மீண்டும் எழுந்து நின்றிருக்கிறது. ஆனால், அப்போது எல்லாம் அது உட்கட்சி பூசல் என்ற நிலையோடு நின்றது. இப்போது, நிலைமை அப்படியில்லை. உட்கட்சி பூசல் என்பது மட்டுமின்றி, இதன் மூத்த தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளை வளைத்து  போடும் பாஜ என்ற வல்லூறுவின் வேட்டையிலும் சிக்கி இருக்கிறது. தற்போது, இந்த வேட்டையில் மம்தாவும் இறங்கி இருப்பது, காங்கிரசுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரசின்  இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருக்கும் நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கபில் சிபல் உட்பட 23 மூத்த தலைவர்கள் ( ஜி-23 குழு) அவ்வப்போது அறிக்கை விட்டு வருகின்றனர். அதற்கு முன்பாக,  காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, தற்காலிகமாக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.  ஜி-23 தலைவர்களின் வலியுறுத்தலால், தேசிய தலைவர் பதவி உட்பட கட்சியின்  அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, தற்போது அதற்கான முதல் கட்ட ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 1990ம் ஆண்டுகளில்  இருந்து பார்த்தால் பல மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தோற்றுவிப்பதும், வேறொரு கட்சியில் இணைவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2014ல் ஒன்றியத்தில் பாஜ ஆட்சியை பிடித்த பிறகு, இந்த போக்கு அதிகமாகி இருக்கிறது. ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில், பல மாநிலங்களில் காங்கிரசை பாஜ கபளீகரம் செய்து விட்டது. இது,  காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் பெரிய அளவில் பலவீனப்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய மம்தா, அங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சி நடத்தி கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தார். தற்போது, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளார்.  இதைத் தொடர்ந்து, இப்போது அவர் தேசிய அரசியலுக்கு குறிவைத்து, அதை நோக்கி காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார். பாஜ.வின் பாணியில் இவரும் காங்கிரசை நோக்கியே கணைகளை தொடுத்து வருகிறார். அக்கட்சி தலைவர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களை தனது கட்சிக்கு இழுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதன் காரணமாக, மேற்கு வங்கத்தையும் தாண்டி  திரிபுரா, கோவா, மேகாலயா, அசாம், சட்டீஸ்கர், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களிலும் மம்தா  காலூன்றி வருகிறார். இதன் மூலம்,  தேசிய அரசியலில்  தன்னை வலுவான எதிர்க்கட்சி தலைவராக அடையாளப்படுத்தி வருகிறார். இதற்காக அடிக்கடி டெல்லி சென்று வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்றபோது சோனியா காந்தியை சந்தித்த மம்தா, கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற போது அவரை  சந்திக்கவில்லை. அதற்கு மாறாக, தனது பரம எதிரியாக வெளியுலகில் பறைசாற்றி கொண்டிருக்கும் மோடியை சந்தித்து பேசினார்.  எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களை தனது கட்சிக்கு இழுக்கும் வேலையில் பாஜ சமீப காலமாக தீவிரம் காட்டவில்லை. ‘ஆபரேஷன் தாமரை’யால் அதற்கு ஏற்பட்ட அவப்பெயரே இதற்கு காரணம். எதிர்க்கட்சிகளை ஒட்டு மொத்தமாக பலவீனப்படுத்தி, சர்வாதிகார ஆட்சியை நடத்த மோடி முயல்வதாக மக்களிடம் பேச்சு அடிப்பட்டு வரும் காரணத்தாலேயே, இந்த ஆள் பிடிக்கும் வேலையை பாஜ குறைத்திருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால், அந்த வேலையை இப்போது மம்தா செய்ய தொடங்கி இருக்கிறார். பாஜ.வுக்கு போட்டியாக காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸ் வளைத்து போடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல், மோடியையும் மம்தா சந்தித்து பேசி இருக்கிறார்.  இந்த சந்திப்பின்  பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.  ‘ஒருவேளை பாஜ.வின் ‘பி டீமோ’ என்று மம்தாவை பற்றி சந்தேகமும் கிளப்பப்படுகிறது. பல மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், திரிணாமுல் கட்சியில் தொடர்ந்து இணைந்து வருவதால், மம்தாவின் மீது  காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் உள்ளது. இருந்தும், வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜ.வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும், வெளியிலும் பாஜ.வுக்கு எதிரான ‘எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை’ என்ற பெயரில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டு கொண்டே, மறுபுறும் அக்கட்சி தலைவர்களை மம்தா வளைத்து போட்டு கொண்டிருப்பது, மிகப்பெரிய அரசியல் தந்திரமாக கருதப்படுகிறது.

இதன்மூலம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தன்னை பிரதான எதிர்க்கட்சித் தலைவராக பிரகடனப்படுத்தி கொள்ள அவர் திட்டமிடுவது  இலைமறை, காய்மறையாக தெரிகிறது. அதனால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ, காங்கிரசுக்கு போட்டியாக 3வது அணியை தனது தலைமையில் மம்தா திரட்டுவாரா? அல்லது   காங்கிரசை ஓரம் கட்டி விட்டு அதற்கு மாற்றாக தன்னையே பிரதான எதிர்க்கட்சி தலைவராக வெளிப்படுத்தி கொள்வாரா?. மோடியா? - மம்தாவா? என்ற போட்டியை ஏற்படுத்துவாரா? என்ற கருத்து, தேசிய அரசியலில் பல்வேறு கோணங்களில் பரபரப்பாக அலசப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. மம்தாவின் புதிய கணக்குதான் என்ன? அது பலிக்குமா? என்பது விரைவில் ‘சந்தைக்கு’ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


*  கடந்த 90ம் ஆண்டுகளில் காங்கிரசில் இருந்து வெளியேறி, இன்று மாநில அளவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலைவர்களில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முதன்மையானவர்.
* அதேபோல்,  ஆந்திராவில் காங்கிரசில் இருந்து விலகி,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய  ஜெகன் மோகன் ரெட்டி, இன்று அந்த மாநிலத்தில் முதல்வராகி இருக்கிறார்.

*  மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்,  சிவசேனாவின் தலைமையில்  இணைந்து  கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ளது.
* இதேபோல், கேரளா, கர்நாடகா போன்வற்றிலும் அக்கட்சியில் ஏற்படுத்தப்பட்ட பிளவுகளால் பலவீனமாகி இருக்கிறது.   வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா போன்றவற்றில் மாநில கட்சித் தலைமையே மாற்றுக் கட்சிக்கு சென்று விட்டது.

* காங்கிரசின் தேசிய  மகளிர் பிரிவுத் தலைவராக இருந்தவரும், முன்னாள் எம்பி.யுமான சுஷ்மிதா தேவ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். அடுத்த சில நாட்களில் மம்தா முன்னிலையில் திரிணாமுல் கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் பலமிக்க தலைவராக கருதப்பட்ட சுஷ்மிதா தேவ், இன்று திரிணாமுல் காங்கிரசின் முகமாக மாறிவிட்டார்.

* பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் பலமான தலைவராக கருதப்பட்ட அமரீந்தர் சிங், சமீபத்தில் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது மட்டுமின்றி, கட்சியில் இருந்தும் விலகினார். தற்போது, அவர் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அந்த கட்சியானது அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வுடன் இணைந்து  ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடவும் தயாராகி விட்டது.

* அடுத்தாண்டு, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் கோவாவில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஏற்கனவே பாஜ.வுக்கு சென்று விட்ட நிலையில், மிச்சம் மீதியுள்ள முகம் தெரிந்த சில தலைவர்களும் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவி வருகின்றனர்.  இந்த மாநிலத்தில் முன்னாள் முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரிணாமுல் கட்சியில் சேர்ந்துள்ளார். அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மம்தா வழங்கினார்.

* மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக கான்ரட் கொங்கல் சங்மா செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உட்பட 17 எம்எல்ஏக்கள் இருந்தனர்.  இவர்களில் இரவோடு இரவாக முகுல் சங்மா உட்பட 12 எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இது, மேகாலய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. - இப்படியாக, பல மாநிலங்களில் தொடர்ச்சியாக காங்கிரஸ் பிளவுகளை சந்தித்து கொண்டிருக்கிறது.


Tags : Congress ,Mamata ,BJP ,Deema ,Sonia Gandhi , Congress, Mamata Banerjee, Sonia Gandhi
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...