×

சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கடந்த இருவாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் நான்கு நாட்களுக்கு விடாமல் மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் வளி மண்டல காற்று சுழற்சி நீடித்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காற்றின் திசை மாறுபாடு காரணமாக தற்போது அது வலுப்பெற வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனிடையே தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை (27-11-2021) சென்னை, செங்கல்பட்டு, ராமநாதபுரம், கடலூர், திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Chennai ,Kanchipuram ,Cuddalore , Holidays for schools and colleges in 16 districts including Chennai, Kanchipuram and Cuddalore tomorrow: Collectors' announcement
× RELATED சென்னை, காஞ்சிபுரத்தில் முதியோர்கள்,...