×

2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே காங். கட்சியை மம்தா குறிவைப்பது ஏன்?.. அசாம், கோவா, மேகாலயாவில் அடுத்தடுத்த திருப்பத்தால் நெருக்கடி

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியை குறிவைத்து மம்தா பானர்ஜி செயல்படுவதாகவும், அதற்காக அசாம், கோவா, மேகாலயா போன்ற மாநிலங்களில் தனது கட்சியை வலுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பின், லால் பகதூர் சாஸ்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சராக பணியாற்றினார். லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவையொட்டி இந்திரா காந்தி பிரதமர் ஆனார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக இந்திரா காந்தி நடந்ததாக கூறி, அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் காங்கிரஸ் இரு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்திரா காந்திக்கு ஆதரவளித்ததால், இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரஸ் என்று கடந்த 1969ம் ஆண்டு அறிவித்தது. அதனால் எதிர் குழுவானது ‘நிறுவன காங்கிரஸ்’ என்ற பெயரை சூட்டிக்கொண்டது. இன்றைய நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருக்கும் நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கபில் சிபல் உட்பட 23 மூத்த தலைவர்கள் அவ்வப்போது அறிக்கை விட்டு வருகின்றனர்.

முன்னதாக காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யாமல் காங்கிரஸ் தலைமை உள்ளது. கடந்த 1990ம் ஆண்டுகளில் இருந்து பார்த்தால் பல மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தோற்றுவிப்பதும், வேறொரு கட்சியில் இணைவதும் அதிகரித்து வருகிறது. இது காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் பெரிய அளவில் பலவீனப்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இன்று மாநில அளவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலைவர்களில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ெரட்டி முதல்வர்), மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார் - சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி) ஆகியவற்றை கூறலாம். வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா போன்றவற்றில் மாநில கட்சித் தலைமையே மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டது. காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவராக இருந்தவரும், முன்னாள் எம்பியுமான சுஷ்மிதா தேவ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

அடுத்த சில நாட்களில் மம்தா முன்னிலையில் திரிணாமுல் கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் பலமிக்க தலைவராக கருதப்பட்ட  சுஷ்மிதா தேவ், இன்று திரிணாமுல் கட்சியின் முகமாக மாறிவிட்டார். பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் பலமான தலைவராக கருதப்பட்ட அமரீந்தர் சிங், சமீபத்தில் கட்சி தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது மட்டுமின்றி, கட்சியில் இருந்தும் விலகினார். தற்போது அவர் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அந்த கட்சியானது அடுத்தாண்டு நடைபெறும் பேரவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடும்.

அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடைபெறும் கோவாவில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். அம்மாநிலத்தில் முன்னாள் முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரிணாமுல் கட்சியில் இருந்ததால் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மம்தா வழங்கினார். மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக கான்ரட் கொங்கல் சங்மா செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உட்பட 17 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இவர்களில் இரவோடு இரவாக முகுல் சங்மா உட்பட 12 எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இவர்களது இணைவு மேகாலய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தில் அரசியல் பயணத்தை ெதாடங்கிய மம்தா, இன்று திரிபுரா, கோவா, மேகாலயா, அசாம், சட்டீஸ்கர், ஒடிசா, பீகார் போன்றவற்றிலும் காலூன்றி வருகிறார். இந்த மாநிலங்களில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகளை தங்களது கட்சியில் வளைத்து போடுவதை மம்தா குறியாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய மம்தா, தேசிய அளவில் தன்னை வலுவான எதிர்கட்சி தலைவராக அடையாளப்படுத்தி வருகிறார்.

இதற்காக அடிக்கடி டெல்லி சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி வந்த போது சோனியாவை சந்தித்த மம்தா, கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த போது சோனியாவை சந்திக்கவில்லை. இதன் பின்னணி குறித்தும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. பல  மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், திரிணாமுல் கட்சியில் தொடர்ந்து இணைந்து வருவதால் காங்கிரஸ் தலைமை மம்தா மீது அதிருப்தியில் உள்ளது. இருந்தும், வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், காங்கிரஸ் தலைமையை அவர் ஏற்பாரா? பிரதான எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரசை ஓரம்கட்டிவிட்டு தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ள மம்தா திட்டம் தீட்டி வருகிறாரா? வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? மம்தா? என்ற வியூகம் பலிக்குமா? எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா வெற்றி பெறுவாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : Kang ,Mamta ,Azam, Goa ,Meghalaya , In the run-up to the 2024 parliamentary elections, Cong. Why is Mamata Banerjee targeting the party?
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.5-ல் வெளியீடு