×

பாபநாசம் அணையில் 20 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: பாலம் மூழ்கியதால் சொரி முத்தையனார் கோயிலுக்கு செல்ல தடை

வி.கே.புரம்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லையில் பெய்த அளவுக்கு தென்காசியில் பலத்த மழை பெய்யவில்லை என்றாலும், பரவலாக மழை பெய்துள்ளது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக உள்ளது. அணைக்கு 3096.90 கனஅடி நீர் வரத்து உள்ளது. 1678.18 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 140.16 அடியாக உள்ளது.  தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால், இன்று காலை 10 மணிக்கு அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் காரையார் சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்லும் பாலத்தை மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் செல்கிறது. இதன் காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் பாபநாசம் கோயில் படித்துறை முன்பு அமைந்துள்ள பிள்ளையார் கோயிலை மூழ்கடித்துக் கொண்டு வெள்ள நீர் செல்கிறது. கடும் வெள்ளம் காரணமாக பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. போலீசார் அப்பகுதியில் கயறு கட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1936 கனஅடி நீர் வரத்து உள்ளது. வெளியேற்றம் இல்லை. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 30.50 அடியாக உள்ளது. அணைக்கு 399 கனஅடி நீர் வரத்து உள்ளது. வெளியேற்றம் இல்லை. நம்பியாறு அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 22.96 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 300 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 52.25 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 230 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு: பாபநாசம்- 81 மிமீ, சேர்வலாறு- 50, மணிமுத்தாறு- 94.6,நம்பியாறு- 80, கொடுமுடியாறு- 70, அம்பை- 79, சேரன்மகாதேவி-84.80, நாங்குநேரி- 64, ராதாபுரம்- 54, களக்காடு- 96.2, மூலக்கரைப்பட்டி- 93, பாளையங்கோட்டை- 107, நெல்லை- 76.20 மிமீ. தென்காசி மாவட்டத்தில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 82.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 342 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. 84 அடி ெகாள்ளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 81 அடியாக உள்ளது. அணைக்கு 55 கனஅடி நீர் வரத்து உள்ளது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 68.24 அடியாக உள்ளது. அணைக்கு வரும்  150 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.  குண்டாறு அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 33 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 132.22 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நிரம்பியதால் 131 அடி பராமிக்கப்பட்டு அணைக்கு வரும் 35 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு: கடனா- 32 மிமீ, ராமநதி- 35, கருப்பாநதி-19, குண்டாறு-7, அடவிநயினார்- 27, ஆய்க்குடி- 52, செங்கோட்டை- 13, தென்காசி- 33.18, சங்கரன்கோவில்-38, சிவகிரி- 45 மிமீ.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு: திருச்செந்தூர்- 248, காயல்பட்டினம்- 306, குலசேகரன்பட்டினம்- 158, விளாத்திகுளம்- 41, காடல்குடி- 52, வைப்பார்- 149, சூரங்குடி- 56, கோவில்பட்டி- 71, கழுகுமலை-36, கயத்தாறு-58, கடம்பூர்-90, ஓட்டப்பிடாரம்- 121, மணியாச்சி- 87, வேடநத்தம்- 80, கீழஅரசடி- 59, எட்டயபுரம்- 78.9,சாத்தான்குளம்- 121, வைகுண்டம்- 179, தூத்துக்குடி- 266.60 மிமீ. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 306 மிமீ மழை பதிவானது, இயற்கை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மணிமுத்தாறு அணை நிரம்ப இன்னும் 23 அடி தேவை இருப்பதால், வடகிழக்கு பருவமழை முடியும் காலத்திற்குள் நிரம்பி விடும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தூத்துக்குடியில்  வரலாறு காணாத மழை
தூத்துக்குடி மாநகரில் கடந்த 1955ம் ஆண்டு டிச.3ம் தேதி 188 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதன்பின்னர் 64 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது 2019ம் ஆண்டு மார்ச் 15ல் 200.8 மிமீ மழை பதிவானது. இடைப்பட்ட ஆண்டுகளில் சராசரியாக 105, 102 மிமீ ழை பதிவானது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பின்னர் மாநகரில் வரலாற்றில் மிக அதிகபட்சமாக 266.60 மிமீ மழை பதிவாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Tags : Papanasam dam ,Chori Muthayanar temple , 20 thousand cubic feet of water opened in Papanasam Dam: Sori Muthayanar temple banned
× RELATED பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்