டெல்டாவில் 2வது நாளாக பலத்த மழை நீடிப்பு: 2 லட்சம் மீனவர் முடக்கம், மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது

திருச்சி: டெல்டாவில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை இன்று 2வது நாளாக நீடித்தது. 2 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் நேற்று மதியம் முதல் மழை பெய்து வருகிறது. நாகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 11 மணி முதலும், மயிலாடுதுறையில் இரவு 8 மணி முதலும், திருவாரூர், தஞ்சையில் மாலை 6 மணி முதலும் கன மழை பெய்து வருகிறது.

அதேபோல் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று மதியம் முதலும், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பிற்பகலில் இருந்தும் மழை பொழிந்து வருகிறது. விடிய விடிய நீடித்த மழை, இன்று காலையிலும் தொடர்ந்தது. காரைக்காலிலும் விடிய விடிய மழை கொட்டியது. கனமழையால் திருவாரூர் பழைய பேருந்து நிலையம், தெற்குவீதி, கமலாலயம் வடகரை, விஜயபுரம் அரசு தாய்-சேய் நல மருத்துவமனை, கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராமகேரோடு, விஐபி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. விஜயபுரம் அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த ஆத்துப்பட்டி அருகே சாலையோரத்தில் பெரிய வாகை மரம் நேற்று இரவு சாலையில் விழுந்தது. இதனால் மணப்பாறை- துவரங்குறிச்சி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூர், செங்காட்டுப்பட்டி, சிக்கத்தம்பூர், வெள்ளிப்பாளையம், பாலக்கரை பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. துறையூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்து வருகிறது.

ஏற்கனவே பெய்த மழையில் சுமார் 1.70 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கியிருந்த நிலையில், தற்போதும் பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கடல் சீற்றமாக காணப்படுவதால் நாகை, புதுகை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் மீனவர்கள் கடலுக்கு இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. 50,000 விசைபடகுகள், பைபர் படகுகள், நாட்டுப்படகுகள் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. அரியலூர் அருகே பெரியநாகலூர் ஊராட்சியில் உள்ள சின்ன நாகலூரில் கனமழையால் சின்னபிள்ளை(70) என்பவரின் மண்சுவர் நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதில் சின்னபிள்ளை பலியானார். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More