×

வைகை அணையில் இருந்து 7,232 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்: ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து வைகையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.

தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மற்றும் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை தொடர்கிறது. இதனால் இந்த ஆண்டு 3வது முறையாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உபரிநீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடிக்கடி பலத்த மழை பெய்து வருவதால் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 5,119 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு 4,757  கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து இன்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 7,232 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.65 அடி. இதில் ஆற்றின் வழியாக 6,713 கனஅடி தண்ணீரும், கால்வாயில் 300 கனஅடி தண்ணீர் தண்ணீரும், 58ம் கால்வாயில் 150 கனஅடி தண்ணீரும், குடிநீருக்கு 69 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 7,232 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் தேனி மாவட்டத்திலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் வைகை ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்கக் கூடாது என்றும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு நீர்மட்டம் 141.65 அடி
கூடலூர்: முல்லைப்பெரியாறு அணை  நீர்மட்டம் இன்று காலை 141.65 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,623  கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 2,300 கனஅடி  தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 7,572 மில்லியன் கன  அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் விரைவில் 142 அடியை எட்டிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சோத்துப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி  126.67 அடியாக இருந்தது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 241 கனஅடியாகவும்,  அணையிலிருந்து வினாடிக்கு 30 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின்  இருப்பு நீர் 100 மில்லியன் கனஅடியாக உள்ளது. 57.00 அடி உயரமுள்ள  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து  விநாடிக்கு 129 கன அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர்  வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 435.32 மில்லியன் கனஅடியாக  உள்ளது. மழை விபரம்(மில்லி மீட்டரில்): பெரியாறு 29.8, தேக்கடி 38, கூடலூர்  52.7, பாளையம் 50.3, மஞ்சளாறு 48, சோத்துப்பாறை 29, வைகை அணை 48,  வீரபாண்டி 78.6. 


Tags : Vaikai Dam , 7,232 cubic feet of water discharged from Vaigai Dam: Warning to the people living along the Vaigai River
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை வைகை அணையில் குறையாத நீர்மட்டம்