×

குமரியில் மீண்டும் கன மழை எதிரொலி: 12 கிராமங்கள் துண்டிப்பு

* அணைகளில் இருந்து 21 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
* கரையோர மக்கள் வெளியேற்றம்

நாகர்கோவில்: குமரியில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கி உள்ளது. அணைகளுக்கான நீர் வரத்து சுமார் 21 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. 12 மலையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. இந்த நிலையில் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்த வண்ணம் உள்ளது.  

கடந்த 4 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. ஆறுகளிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மீண்டும், மலையோர கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இன்று காலை 8.30 மணி வரையில் இடைவிடாமல் மழை பெய்தது. இதே போல் பூதப்பாண்டி, காட்டுப்புதூர், தெரிசனங்கோப்பு, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, கடுக்கரை, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடைவிடாமல் மழை பெய்தது.

மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ரப்பர் வெட்டும் தொழில், செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. நித்திரவிளை, வைக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்னர். இன்று காலை முதல் வைக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி, பேச்சிப்பாறை அணைக்கு 1,103 கன அடியும், பெருஞ்சாணியில் 1,259 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் நேற்று இரவு முதல் மலையோர பகுதிகளில் கன மழை பெய்ததால், கோதையாற்றின் மேல் பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்பர் கோதையாறு அணையில் இருந்து 4,000 கன அடி திறந்து விடப்பட்டது.  இதனால் பேச்சிப்பாறை அணைக்கான நீர்வரத்து, திடீரென 15 ஆயிரம் கன அடியை எட்டியது. காலை 9 மணி நிலவரப்படி 15.694 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருந்தது பெருஞ்சாணி அணைக்கு சுமார் 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அணைகளுக்கு 21.694 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததால், அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பும் அதிகரித்தது. பேச்சிப்பாறையில் இருந்து 3 ஆயிரம் கன அடியும், பெருஞ்சாணியில் இருந்து 2 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை நீர்மட்டம் 44.35 கன அடியாகவும், பெருஞ்சாணி 73.43 கன அடியாகவும் இருந்தன. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு, வள்ளியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பழையாற்றிலும் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மோதிரமலை, பேச்சிப்பாறை, ஆறுகாணி பகுதிகளில் மழை காரணமாக சுமார் 12 மலை கிராமங்கள் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. கீரிப்பாறை ஆற்றில் இன்று காலை முதல் வெள்ளம் அதிகரித்துள்ளதால், அரசு ரப்பர் கழக குடியிருப்பில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தொடர்ச்சியாக பெய்த மழையால் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

குளங்கள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. விளை நிலங்களும் தண்ணீரில் மூழ்கின. பின்னர் படிப்படியாக வெள்ளம் வடிந்த நிலையில், மீண்டும் மழை தொடங்கி இருப்பது மக்களை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
குமரி  மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததாலும், வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாலும் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அளித்து கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இதே போல் நாகர்கோவில்,  வடசேரி, ஆசாரிப்பள்ளம், வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம் துணை மின்  நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின் வாரியத்தின் சார்பில் பராமரிப்பு  பணிகள் நடக்க இருந்தன. ஆனால் மழை காரணமாக இந்த பராமரிப்பு பணிகள் ஒத்தி  வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

குமரியில் மழை அளவு
இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: பூதப்பாண்டி 55.2, சிற்றார் 1, 37.4, களியல் 95.2, கன்னிமார் 94.2, கொட்டாரம் 30.2, குழித்துறை 64.9, மயிலாடி 28.4, நாகர்கோவில் 22, பேச்சிப்பாறை 50.2, பெருஞ்சாணி 58.2, புத்தன் அணை 56.8, சிற்றார்2, 34.2, சுருளகோடு 57,தக்கலை 37, குளச்சல் 8.6, இரணியல் 13, பாலமோர் 60.4, மாம்பழத்துறையாறு 46.4, பொய்கை 60, ஆரல்வாய்மொழி 60, கோழிப்போர்விளை 57, அடையாமடை 27, குருந்தன்கோடு 35.6, முள்ளங்கினாவிளை 59.4, ஆனைக்கிடங்கு 46.2, முக்கடல் 34, கோதையாறு (மேல் பகுதி) 55, கோதையாறு (கீழ்பகுதி) 49 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் 26 வீடுகள் இடிந்தன
குமரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு இதுவரை 1000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இந்த நிலையில் நேற்று முதல் பெய்து வரும் மழைக்கு, மேலும் 26 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 11 வீடுகள் முழுமையாகவும்,் 15 வீடுகள் பகுதியாகவும் இடிந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 9 வீடுகள் முழுமையாகவும், 6 வீடுகள் பகுதியாகவும் இடிந்தன. விளவங்கோடு தாலுகாவில் 4 வீடுகள் பகுதியாகவும் ஒரு வீடு முழுமையாகவும் இடிந்துள்ளன. கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகள் பகுதியாகவும், ஒரு வீடு முழுமையாகவும் இடிந்துள்ளது.

கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில்  கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது.  29ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 11  மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  திருவனந்தபுரம்  மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்றும் இடைவிடாது பெய்து  கொண்டிருக்கிறது. கனமழையை தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் பள்ளி  கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Kumari , Echo of heavy rains again in Kumari: 12 villages cut off
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து