×

கொழும்பு ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இந்திய தூதரகத்தை ‘கிளிக்’செய்த 3 பாகிஸ்தானியர் கைது: இலங்கை போலீஸ் நடவடிக்கை

கொழும்பு: கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியரை அந்நாட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலமாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இலங்கையில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மூலம் இந்தியாவை உளவு பார்ப்பதற்காக அந்நாட்டை பயன்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் செயல்படும் இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த நபர்களை அந்நாட்டு போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் மூன்று பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், தற்போது அவர்களை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கொழும்பு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த மூன்று பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டு மூன்று போருக்கும் ஜாமீன் பெற்றுள்ளனர். இருப்பினும், அவர்களிடம் இருந்து அவர்களின் செல்போன்கள் மற்றும் பாஸ்போர்ட்களை நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது. விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும் பாகிஸ்தானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நேரடி விமானங்கள் இயங்காததால், பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்தனர். இங்கிருந்து சவூதி அரேபியா செல்வதற்காக கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தனர்.

இந்திய தூதரகம் அருகில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தனர். அப்போது, இந்திய தூதரகத்தை தங்களது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளனர்’ என்றன. இந்திய தூதரகத்தை பாகிஸ்தானை சேர்ந்த மூவர் புகைப்படங்கள் எடுத்ததால், இதற்கு பின்னால் ஏதேனும் சதி இருக்கிறதா? என்பது குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் இலங்கை புலனாய்வு அமைப்புகளுடன் விசாரித்து வருகிறது.

Tags : Pakistanis ,Colombo , 3 Pakistanis arrested for 'clicking' on Indian embassy in Colombo hotel: Sri Lankan police action
× RELATED கடற்கொள்ளையர்கள் கடத்திய ஈரான்...