ஆயுதங்களை திருடி மாவோயிஸ்ட்டுக்கு சப்ளை செய்த பிஎஸ்எப் ஏட்டு உள்ளிட்ட 5 பேர் கைது: ஜார்க்கண்ட் ஏடிஎஸ் அதிரடி

ராஞ்சி: பஞ்சாப் முகாமில் ஆயுதங்களை திருடிவந்து மாவோயிஸ்டுகளுக்கு சப்ளை செய்த பிஎஸ்எப் ஏட்டு உள்ளிட்ட 5 பேரை ஜார்க்கண்ட் ஏடிஎஸ் படை அதிரடியாக கைது செய்தது. ஜார்க்கண்ட் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கிடைத்த தகவலின் அடிப்படையில் சில இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கும்பலுக்கு ஆயுதங்கள், கவச உடைகள், வெடிமருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்ததாக ஐந்து பேரை கைது செய்தனர்.

அவர்களில் தற்போது பணியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையில் பணியில் இருக்கும் தலைமை கான்ஸ்டபிள் மற்றும் ஓய்வுபெற்ற பிஎஸ்எப் வீரர்கள் ஆவர். இதுகுறித்து ஜார்க்கண்ட் ஐ.ஜி அமோல் வெனுகாந்த் ஹோம்கர் கூறுகையில், ‘மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்த வழக்கில் ஜார்க்கண்டில் வசிக்கும் பிஎஸ்ஏப் தலைமை கான்ஸ்டபிள் கார்த்திக் பெஹ்ரா, பஞ்சாப் மாநிலம் பெரோசெபூரில் உள்ள பிஎஸ்எப் முகாமில் இருந்து வெடிமருந்துகள், டெட்டனேட்டர்கள் போன்றவற்றை கடத்தி வந்து மாவோயிஸ்டுக்கு சப்ளை செய்துள்ளார்.

இவருக்கு பீகாரை சேர்ந்த ஓய்வுபெற்ற பிஎஸ்எப் வீரர் அருண் குமார் சிங், மத்திய பிரதேசத்தை சேர்ந்த குமார் குர்லால், ஷிவ்லால் தவால் சிங் சவுகான், ஹிர்லா குமான் சிங் ஆகியோர் உதவி செய்துள்ளனர். இவர்கள் பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் செயல்படும் மாவோயிஸ்ட் கும்பலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜோத்பூர், ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் செயல்படும் பிஎஸ்எப் முகாமில் இருந்து கடத்தி வந்துள்ளதால், அங்குள்ள பணியாளர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: