கொடநாடு காவலாளி கொலை வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் தனிப்படை விசாரணை

கோவை: கொடநாட்டில் எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலாளர் நடராஜனிடம் 2வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ளது. இங்கு, கடந்த 2017, ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொள்ளை கும்பல் நுழைந்து, பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர் பங்களாவில் இருந்த பல்வேறு ஆவணங்களையும், பொருட்களையும் திருடி சென்றது.

சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான் உட்பட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முக்கிய குற்றவாளியான சாலை விபத்தில் பலியான கனகராஜின் அண்ணன் தனபால், நண்பர் ரமேஷ், கனகராஜின் மனைவி மற்றும் மைத்துனர், குற்றவாளி சயான் உட்பட 6 பேர், சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த போலீசார், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உட்பட 40க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரணம் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தனிப்படை போலீசார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். எஸ்டேட் முழுவதும் மேற்பார்வை செய்து, பராமரிப்பு பணிகளை நடராஜன் செய்து வந்ததால் இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக அவருக்கு தகவல் தெரிந்திருக்கலாம் என்பதால் இந்த விசாரணை நடந்ததாகவும், இதில் அவர், பல தகவல்களை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories:

More