×

நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்க மாதம் தோறும் சிறப்பு முகாம்கள்; அமைச்சர் தகவல்.!

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்க மாதம் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என வாரிய ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் இன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இவ்வாய்வு கூட்டத்தில் மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பணிகள்,உட்கட்டமைப்பு பணிகள், உலக மற்றும் ஆசியவளர்ச்சி வங்கிகளின் நிதி உதவி திட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விற்பனைபத்திரம் , மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கு விற்பனைபத்திரம், புதிதாக தொடங்கப்பட உள்ள திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு கூட்டத்தில் பேசிய மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர் அவர்கள், ‘‘சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வதற்கு முன்னர், அக்குடியிருப்புகளில் வாழும் குடும்பங்கள் மாற்றிடங்களுக்கு குடிபெயரும் பொழுது, மறுகட்டுமான திட்டகாலங்களில் வெளியே வாடகை வீட்டில் வசிக்க கருணை தொகையாக ரூ.8000 வழங்கப்பட்டு வந்ததை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இத்தொகையினை ரூ.24,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு, 22.11.2021 அன்று அரசாணை வெளியிடபட்டுள்ளது.

நடப்பாண்டில் குடியிருப்பு வாசிகளுக்கு 25 ஆயிரம் கிரையப்பத்திரங்கள் வழங்கப்படவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய ஏதுவாகவும், ஏழை எளிய மக்கள் கிரையப்பத்திரங்களை எளிதில்பெறும் வகையில் வாரிய திட்டப்பகுதிகளிலேயே மாதம் ஒரு முறை சிறப்பு முகாம்கள் நடத்தி, கிரையப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கடந்த ஆட்சி காலத்தில் பயனாளிகளையே தேர்ந்தெடுக்காமல் கட்டிமுடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களை கொண்டு தகுதியான பயனாளிகளை உடனடியாக தேர்வு செய்து, ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் ஒதுக்க உரிய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பட்ஜெட்டில்அறிவித்துள்ளவாறு, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப்பணிகளை மழைகாலம் முடிந்தவுடன் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைபெற்று வரும் புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் 7500 குடியிருப்புகள் நடப்பாண்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுமான திட்டங்களுக்கான பணிகளை விரைவாக தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும்.

வாரியத்தால் கட்டப்படும் புதிய குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மூன்றாம் தரப்பு தரக்கட்டுபாட்டு நிறுவனங்களாக அரசு பொறியியல் பல்கலைகழங்கங்கள்  மற்றும் அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்போது இந்நிறுவனங்களை கொண்டு 18 திட்டப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வரும் காலங்களில் அனைத்து புதிய திட்டப்பகுதிகளிலுக்கும் இவ்வாய்வு விரிவுபடுத்தப்படும்.

மழை காலங்களில் வாரிய திட்டப்பகுதிகளில் மழைநீர் தேங்காமலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். சுகாதாரத்துறையினருடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இக்குடியிருப்புகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சமுதாய வளர்ச்சி பிரிவின் மூலம் தொழில்திறன் பயிற்சிகள், தொழில் தொடங்க நிதிஉதவிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும். எனத் தெரிவித்தார்.

Tags : Urban Housing Development Board , Urban Housing Development Board Monthly Special Camps for Leasing to Housing and Land Allocators; Minister Information.!
× RELATED ரூ.8.16 கோடி மதிப்பீட்டில்...