×

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழை 4,000 ஏக்கர் ராகி பயிர்கள் நாசம்-மலைவாழ் மக்கள் வேதனை

ஈரோடு : பர்கூர் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ராகி பயிர் கதிரிலேயே முளைத்து நாசமாகிவிட்டதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் ராகி, சோளம், கம்பு, மரவள்ளி உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. இடைத்தரகர்கள் ஆதிக்கம், போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் விளை பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் பாதி விலைக்கு விற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு பர்கூர் மலைப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ராகி பயிரிடப்பட்டிருந்தது. ராகி கதிர் பிடித்து அறுவடைக்கு தயாரான சூழலில் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியதால்  கதிரிலேயே முளைப்பு ஏற்பட்டு நாசமாகிவிட்டதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி குணசேகரன் கூறியதாவது:

பர்கூர் மலைப்பகுதியில் மலைவாழ் மக்கள் ராகி, கம்பு, கேள்வரகு உள்ளிட்ட தானிய பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். தங்களின் குடும்ப தேவையை போக மீதமுள்ளவற்றை வெளியில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக ராகி பயிர்கள் கதிரிலேயே முளைப்பு ஏற்பட்டு அடியோடு நாசமாகிவிட்டது.
பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட 30 மலைக்கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ராகி பயிரிடப்பட்டிருந்தது. இதில் 4 ஆயிரம் ஏக்கர் ராகி பயிர்கள் கதிரிலேயே முளைத்துவிட்டது. இதனால், கடும் நஷ்டத்தை மலைவாழ் மக்கள் சந்தித்துள்ளதோடு, உணவு தேவையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மலைக்கிராமங்களில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பேரிடர் நிவாரண தொகை பெரும்பாலும் சமவெளிப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. மலைப்பகுதி விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி இந்த முறை நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குணசேகரன் கூறினார்.

Tags : Bargur , Erode: Due to continuous rains in the Bargur hills, the ragi crop, which was cultivated in an area of 4,000 acres, germinated in the field.
× RELATED கிருஷ்ணகிரி, பர்கூரில் சேர்க்கை...