புதுச்சேரியில் பெண்ணை அரிவாளால் வெட்டி நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள் கைது!: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களை அரிவாளால் வெட்டி நகை பறித்த வழக்கில் மதுரையை சேர்ந்த கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பெண்ணை அரிவாளால் வெட்டி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவம் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கருவடிக்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சமயம் மோட்டார் பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது, மதுரை வெயிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளை கும்பலுடன் தொடர்புடைய கார்த்திக், உண்டியல் செந்தில், ராம்கி, ஆனந்த் என்பது தெரியவந்தது. இவர்கள் லாஸ்பேட்டை, எம்ஜிஆர் பாளையம், கோரிமேடு என புதுச்சேரியில் மொத்தம் 12 இடங்களில் பெண்களை பின்தொடர்ந்து சென்று அவர்களை வெட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதை தொடர்ந்து நான்கு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கைதான நால்வரும் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி அப்பல்லோ ராஜாவின் கூட்டாளி என்பது தெரியவந்துள்ளது. புதுச்சேரியையே கலக்கி வந்த கொள்ளை கும்பலை கைது செய்த போலீசாருக்கு, போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More