கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்கியது-அமைச்சர் தொடங்கி வைத்தார்

மோகனூர் : நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு 2021-22ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, கரும்பு அரவையை தொடங்கி வைத்து பேசியதாவது:

நடப்பாண்டில் 2.10 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படவுள்ளது. ஆலைக்கு கரும்பு சப்ளை செய்யும் அங்கத்தினர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள கரும்புக்கான கிரய தொகை டன் ஒன்றுக்கு ₹2,755 வீதம், கரும்பு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய 15 நாட்களுக்குள் ஒரே தவணையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாநில அரசு அறிவித்துள்ள கரும்பு தொகையும் அங்கத்தினருக்கு வழங்கப்படும்.

ஆலையில் அறுவடை செய்யும் கரும்பினை காலதாமதமின்றி இறக்கும் வகையில் டிப்ளர் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க அதிக மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானமுள்ள புதிய ரக கரும்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நஷ்டத்தில் செயல்பட்ட சர்க்கரை ஆலையை, இனி லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக

ராஜேஷ்குமார் எம்பி பேசுகையில், ‘விவசாயிகளின் நலன் கடந்த 10 ஆண்டுகளில் புறக்கணிக்கப்பட்டது. கூட்டுறவே நாட்டுறவு என்பது, கடந்த 10 ஆண்டுகளில் சுயநலமாக போய் விட்டது.

 இனிவரும் காலத்தில் அது போன்று நடக்காது. தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுசெய்து நடத்தி முடக்கப்பட்டுள்ள கோ- ஜெனரேசன் திட்டம், நடப்பு அரவை திட்டத்திலேயே நிறைவேற்றப்படும்.

 முதல்வர் கரும்பிற்கான ஆதரவு விலையை அறிவித்துள்ளார். ஊக்கத்தொகை ₹200 வழங்குவது காலதாமதம் ஆகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் ஊக்கத்தொகையை கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட்டன. அதன்பின் வந்த அதிமுக வேளாண் துறை மூலம் வழங்கியதால், நிர்வாக சிக்கல் ஏற்பட்டது. இனி கரும்பு ஆலையிலேயே ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காலநிலை, பருவ நிலை காரணத்தால் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. மத்திய அரசு எத்தனால் விலையை கூட்டியுள்ளது. உப உற்பத்தி விலை ஏற்றமடைந்தால் திமுக ஆட்சியில் ₹100 கோடி டெபாசிட் வைத்தது போல  உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கப்படும்’ என்றார்.இந்நிகழ்ச்சியில் ஆலையின் மேலாண்மை இயக்குநர் மல்லிகா, கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நவலடி, ஆலை இயக்குநர்கள் வரதராஜன், குப்புதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாதியில் சென்ற அதிமுக தலைவர்

கரும்பு அரவை தொடங்கும் போது அதிமுகவைச் சேர்ந்த சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார் பங்கேற்று போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் அவர் இல்லாததை அறிந்து எம்பி ராஜேஷ்குமார், மைக்கில் சுரேஷை மேடைக்கு வருமாறு 3 முறை அழைத்தார். ஆனால் சுரேஷ் தொடந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் மற்றும் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.

Related Stories: