மன்னார்குடியில் காலமான மக்கள் மருத்துவர் டாக்டர் அசோக்குமார் இறுதி ஊர்வலம், உடல் தகனம்-எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா பங்கேற்பு

மன்னார்குடி : மன்னார்குடியில் காலமான மக்கள் மருத்துவர் டாக்டர் அசோக்குமாரின் உடல் இறுதி ஊர்வலத்திற்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது. எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா கலந்து கொண்டனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பொது நல அறுவை சிகிச்சை நிபுணர் லயன் டாக்டர் சி. அசோக்குமார் (72) இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், தீபக் என்ற மகனும், ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் டாக்டர் அசோக்குமார் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் காலமானார்.

இறந்த டாக்டர் அசோக்குமார் மன்னார்குடி நகரில் கடந்த 40 ஆண்டு காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் மிக மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். இதில், ஏழை, எளிய மக்களுக்கு குறிப்பாக நரிக்குறவர் இன மக்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவ சேவை அளித்து வந்தார்.மன்னை கலைவாணி சபா என்ற அமைப்பை துவங்கி அதன்முலம் நாடக கலையை உயிர்ப்புடன் வைத்திருந்தார். லயன்ஸ் சங்கத்தில் தீவிரமாக பணியாற்றி ஏராளமான இலவச கண் தான முகாம்களை நடத்தி அதன் முலம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கண்களை தானமாக பெற்று தந்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்.

இந்த நிலையில் மக்கள் மருத்துவர், மனித நேய பண்பாளர் டாக்டர் அசோக் குமார் இறந்த செய்தியறிந்து மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மன்னார்குடி எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாது சாரை சாரையாய் வந்து அவரது உடலுக்கு மாலைகள் அணிவித்து கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினர்.

மன்னார்குடி பாமணி, ரயிலடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் ஊர்வலமாக வந்து தன் வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு இலவச சிகிச்சை அளித்த டாக்டர் அசோக்குமார் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, மறைந்த டாக்டர் அசோக்குமார் உடலுக்கு திமுக எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா, செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தாளாளர் டாக்டர் திவாகரன், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், இந்திய மருத்துவ கழக நீடாமங்கலம் மன்னார்குடி கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் ராஜகுமார், செயலாளர் டாக்டர் மணவழகன், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் ஜெயராணி ராஜகுமார், கண் மருத்துவர் கோவிந்தராஜ், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், திமுக நகர செயலாளர் வீரா கணேசன், அதிமுக நகர செயலாளர் ஆர்ஜி குமார், தமிழ்நாடு மருத்துவமனை இயக்குனர் செல்வமணி, சித்ரா செல்வமணி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், கீதா விஜயகுமார், டாக்டர்கள் காரிமுத்து, பிரகாஷ் மூர்த்தி, சூர்யா பிரகாஷ் மூர்த்தி, சரவணகுமார், பிரியா, கிரண். லயன் பிரபாகரன், லயன் கருணைக்கடல், டாக்டர்கள் பரிமளா பிரபாகரன், கீதா வெ.கீர்த்திவாசன், பாக்யா கீர்த்தி வாசன், ஆர்த்தி,  பாலாஜி ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் பிஆர் செல்வம், ருக்குமணி காஸ் ஏஜென்சி உரிமையாளர் இண்டேன் ராஜகோபால், அசோக் மெடிக்கல் ராஜ கோபால், கேஎஸ் ராஜா, சுப்பிரமணியன், கணேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு டாக்டர் அசோக்குமார் உடலுக்கு மாலைகளை அணிவித்து மலர்களை தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று நண்பகல் 12 மணிக்கு துவங்கிய இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று வடசேரி சாலையில் உள்ள எரிவாயு மயானத்தை வந்தடைந்தது. அங்கு டாக்டர் அசோக்குமார் உடலுக்கு அவரது மகன் தீபக் தீ மூட்டினார். பின்னர் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

More