கலெக்டர் அலுவலகத்தில் விழா தொழிலாளர்களுக்கு ரூ.3.59 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்-வாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார்

திருவாரூர் : திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் வழங்கினார்.திருவாரூர் மாவட்ட தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையிலும், எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் வழங்கி பேசியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நலவாரியங்களில் 41 ஆயிரத்து 30 பதிவு பெற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழக முதல்வர் பொறு ப்பேற்ற நாள் முதல் தமிழக மக்களுக்காக தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக தொழிலாளர்களுக்கு தேவையான திட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு திருமணஉதவிதொகை, பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கான உதவிதொகை, கல்வி உதவி தொகை, ஓய்வூதியம், விபத்து மரணத்திற்கான உதவிதொகை, விபத்து ஊனம் அல்லது நிரந்தர ஊனத்திற்கான உதவிதொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமசடங்கு உதவிதொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் குடியிருப்பு வீடு இல்லாத பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு உதவிதொகையாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் மூலமாக வழங்கப்படுகிறது. இன்றைய (நேற்று) தினம் இயற்கைமரணம் அடைந்த உறுப்பினர்களின் வாரிசுதாரர்களான 6 நபர்களுக்கு இயற்கை மரண உதவிதொகை, 31 நபர்களுக்கு கல்வி உதவி தொகை, 15 நபர்களுக்கு ஓய்வூதியம், 3 நபர்களுக்கு திருமண உதவிதொகை, விபத்தின் காரணமாக மரணமடைந்த உறுப்பினரின் வாரிசுதாரர் ஒருவருக்கு விபத்து மரண உதவிதொகை என மொத்தம் 56 நபர்களுக்கு ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் தமிழக முதல்வரின் தலைமையிலான அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு உறுதுணையாக திகழும்.இவ்வாறு பொன்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் பாஸ்கரன் (அமலாக்கம்), தர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More