காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு-பொதுமக்கள் அச்சம்

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் தெருக்களில், சாலைகளில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்தால் புளுகிராஸ் அமைப்பு தடுத்து வருகிறது. இதனால் தெருவில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வெறிநாய்களை பிடித்து புளுகிராஸ் அமைப்பினரின் வீடுகளில் விட்டு விடுவது, அவர்கள் வளர்த்து கொள்ளட்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தெருக்களில் திரியும் நாய்கள் தஞ்சம் புகுந்துள்ளன.

ஏராளமான நாய்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிகின்றன. நாய்கள் குட்டி போட்டு அங்கேயே தங்கியிருக்கின்றன. இதனால் நாய்களின் பெருக்கம் வளாகத்தில் அதிகரித்து காணப்படுகிறது. நாய்கள் தங்களது குட்டிகளோடு கூட்டாக வலம் வருவதை பார்க்கும் மக்கள் கலெக்டர் வளாகத்திற்குள் நுழைவதற்கே அச்சம் கொள்கின்றனர். எனவே கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தெருவில் சுற்றித் திரியும் வெறிநாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. கலெக்டர் அலுவலகத்திலுள்ள தெருநாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவாவது நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்குமா? என்பதே காரைக்கால் மக்கள் எழுப்பும் கேள்வி.

பாதிப்பிற்கு பின் நடவடிக்கையா?

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் நாய்கள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, நாய்களுக்கு ஆட்சியரையோ, அலுவலர்களையோ, அரசு ஊழியர்களையோ, அமைச்சரையோ தெரியாது. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் தெருநாய்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் யார் மீதாவது இந்த நாய்கள் பாயக்கூடும். முன்கூட்டியே அப்புறப்படுத்துவது காலச்சிறந்தது என்றார்.

Related Stories:

More