புதிய பஸ் நிலைய மொட்டை மாடி சீரமைப்பு

கிருஷ்ணகிரி :  தினகரன் செய்தி எதிரொலியாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய மொட்டை மாடி உள்ளிட்ட பகுதிகளை சீர் செய்யும் பணியில் நகராட்சி ஊரியர்கள் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த, 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதியன்று,  அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், ₹6 கோடியே 78 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதியன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் வளாகத்தில் ஒரே இடத்தில் திமுக, அதிமுகவின் ஆளுமைகளின் பெயர்களுடன் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்ட பெருமையும் உள்ளது. அத்துடன் 3 மாநில எல்லையில் உள்ள மாவட்ட தலைமையிடத்தில் உள்ள ஒரே பஸ் நிலையம் என்ற பெருமையும் இந்த பஸ் நிலையத்திற்கு உள்ளது.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் நகராட்சி பராமரிப்பில் இருக்கும் நிலையில், ‘கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம்’ என்ற பெயர் பலகையும் பெயர்ந்து விழுந்து, மொட்டை மாடி முழுவதும் மழைநீர் தேங்கியும், புற்கள் மற்றும் செடிகள் முளைத்தும் மோசமான நிலையில் காணப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல் காரணமாக பயணிகள் ஆங்காங்கே திறந்தவெளிகளில் சிறுநீர் கழிப்பதால் கடும் துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்த செய்தி கடந்த 24ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இந்நிலையில், நேற்று நகராட்சி ஆணையர் முருகேசன் முன்னிலையில், பஸ் நிலையத்தின் மொட்டை மாடியில் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். ஓரிரு நாட்களில் பஸ் நிலையம் முழுவதும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: