வேலூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது-மழைநீர் பாதிப்பு ஆய்வுக்கு பின் கலெக்டர் தகவல்

வேலூர் : வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் முட்டி அளவுக்கு தண்ணீர் சூழந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். நேற்றுமுன்தினம் மாலை முதல் கோயிலில் உள்ள தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். தேங்கிய இருந்த மழைநீரில் நடந்து சென்று கோயில் வளாகத்தை பார்வையிட்டார். தண்ணீர் தேங்குவதற்கான காரணம் குறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். கோயிலில் இருந்து அகழிக்கு செல்லும் கால்வாய் மூலம் தண்ணீர் கோயில் உள்ளே வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கால்வாயை சுற்றி மணல் மூட்டைகளை வைத்து தண்ணீர் உள்ளே வராதவாறு நடவடிக்கை எடுக்கவும், அதன்பின்னர் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோயிலில் இருந்து வெளியேறும் நீர் பகுதியில் இருந்து கோயிலுக்குள் தண்ணீர் வந்துள்ளது. இந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் பொதுப்பணித்துறை, ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சதுப்பேரி ஏரி கால்வாய் பகுதியில் சில கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. 15 கட்டிடங்களை ஆய்வு செய்து குறியீடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றுள்ளனர். அவற்றை அரசு வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆர்டிஓ, டிஆர்ஓ அதிகாரிகள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல மாவட்டம் முழுவதும் நீர்வழிப்பாதைகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, கமிஷனர் சங்கரன், கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ் சுரேஷ், தாசில்தார் செந்தில், கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1ம் வகுப்பு 8ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக 11  கலைக்குழுவினர் 8 வட்டாரங்களில் விழிப்புணர்வு வரும் 6ம் தேதி வரை மேற்கொள்ள உள்ளனர். இந்த பிரசார விழிப்புணர்வு வாகனங்களை வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த குழுவினர் தினமும் இரண்டு அரசு பள்ளிகள் மற்றும் இரண்டு கிராமங்களை தேர்வு செய்து அங்கு இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

Related Stories:

More