கே.வி.குப்பம் அருகே 30 ஆண்டாக நிரம்பாத கெங்கசாணிக்குப்பம் ஏரி-நீர்வரத்து கால்வாய் ஏற்படுத்த கோரிக்கை

கே.வி.குப்பம் : வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காளாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது கெங்கசானிக்குப்பம் ஏரி. 19.12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியானது நீர் வரத்து கால்வாய் இல்லாமல் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஏரி நிரம்பாமலேயே இருந்து வந்துள்ளது. ஏரியை ஒட்டியுள்ள மலை பகுதியில் இருந்து வரும்  மழைநீர், கானாற்று  ஓடை வழியாக  ஏரிக்கு வரும் நீரே   ஏரிக்கு நீர்வரத்தாகும். இவற்றில்,  கானாற்று வழியாக வரும் மழைநீரால் ஏரி நிரம்பியது இல்லை.

 அதனால், விவசாயிகள் நீர் பாசன வசதி இல்லாமல்  மிகவும் வேதனைக்குள்ளாகின்றனர். கெங்கசாணிக்குப்பம்  ஏரி நிரம்பினால் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி சுமார் 20 குக்கிராமங்கள் பயன்பெறும். இந்த ஏரியின் மதகு வழியாக வெளியேறும்  நீரானது பாசன கால்வாய் வழியாக  கீழ்முட்டுக்கூர் ஊராட்சிக்குட்பட்ட குழப்பனூர் ஏரி, ஜங்காலப்பல்லி ஏரி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் செல்வது போல அமைப்பு உள்ளது.

இப்படி பயன் வாய்ந்த கங்கசாணிக்குப்பம் ஏரி நிரம்பாமலேயே உள்ளதால், குழப்பனூர் ஏரி,  ஜங்காலப்பல்லி ஏரிகள் தண்ணீரிறின்றி வறண்டு உள்ளது. இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘‘மோர்தானா இடதுபுற கால்வாய் - கெங்கசாணிகுப்பம் ஏரிக்கரை இடையே நீர் வரத்து கால்வாய் இணைப்பு  இல்லாததுதான் ஏரி நிரம்பாமல் உள்ளது.  எனவே, மோர்தானா இடதுபுற கால்வாய்  -  கெங்கசாணிகுப்பம் ஏரி இடையே நீர் வரத்து கால்வாய் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் கிராமங்களும் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. விவசாயம் பாதிக்காது. எனவே, 30 ஆண்டாக நிரம்பாமல் உள்ள ஏரிக்கு நீர்வரத்து ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: