டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகாவில் போராட்டம்: ஆடு, மாடு, டிராக்டர்களை கொண்டு தேசிய நெடுஞ்சாலை முடக்கம்..!!

மண்டியா: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடகா மாநிலம் மண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இதனை நினைவு கூறும் வகையில் இன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் எல்லையை கடக்க முயன்றாலோ அல்லது இடையூறு ஏற்படுத்தினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகா மாநிலம் மண்டியாவில் உள்ள விவசாயிகள் மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களிடம் உள்ள ஆடுகள், மாடுகள், டிராக்டர்களை கொண்டு தேசிய நெடுஞ்சாலையை முடக்கி இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்போது இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மண்டியா விவசாயிகளின் போராட்டத்தை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து விவசாயிகள் ஒன்றுகூடாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசாரின் தடுப்பையும் மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தின் காரணமாக மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை முடங்கியுள்ளது. காவல்துறையின் அடக்குமுறையை மீறி தங்களது போராட்டம் வெற்றிபெறும் என விவசாயிகள் உறுதிபட தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories:

More