×

திண்டுக்கல் மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை-சாலைகளில் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதனால் அணைகள், நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று திண்டுக்கல்லில் காலை முதலே லேசான சாரல் மழை பெய்தது. மதியம் 2 மணிக்கும், மாலை 3 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல், பேருந்து நிலையம், குள்ளனம்பட்டி, ரெட்டியபட்டி, பேகம்பூர், சீலப்பாடி, பாலக்கிருஷ்ணாபுரம்‌ அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 3 மணி நேர மழையின் காரணமாக குளிர்ச்சியான காற்று வீசியது.

இதேபோல் , நந்தவனப்பட்டி, தாடிக்கொம்பு அகரம், உள்ளிட்ட திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மழையால் ஒரு சில இடங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது.
பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்தது. இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகனங்கள் மழைநீரில் மிதந்து சென்றன. தொடர் கனமழை காரணமாக பழநி மலைக்கோயில் படிக்கட்டுகளில் மழைநீர் அருவிபோல் கொட்டியது.

தொடர் மழையின் காரணமாக பழநி கோயிலுக்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். படிக்கட்டுகளில் நடந்து சென்ற பக்தர்கள் ஆங்காங்கே இருந்த நிழற்மண்டபங்களில் நிறுத்து வைக்கப்பட்டு, மழைநீர் நின்ற பின்பு பாதுகாப்பாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர் மழையால் பழநி பகுதியில் உள்ள பாலாறு&பொருந்தலாறு, வரதமாநதி மற்றும் குதிரையாறு அணைகள் முழுவதும் நிரம்பி விட்டதால் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் திறப்பு செய்யப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.இதுபோல் மாவட்டத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags : Dindigul district , Dindigul: Heavy rains lashed various parts of Dindigul district yesterday.
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...