×

தொட்டபெட்டா செல்லும் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி : ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் சிறு பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் இங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு மூடப்பட்டன. அப்ேபாது, தொட்டபெட்டாவிற்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஊட்டியில் பெய்த கன மழையின் போது, கோத்தகிரி சாலை சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலையில் சிறு பாலம் ஒன்று (மோரி) ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், சாலை பழுதடைந்தது. இச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட போதிலும், சாலை பழுது காரணமாக தொட்டபெட்டா திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கடந்த ஓராண்டிற்கு மேலாக தொட்டபெட்டா காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, இச்சாலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை சீரமைப்பிற்காகன பூமி பூஜை கடந்த 15ம் தேதி நடந்தது.

தற்போது சாலை சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சாலையோரத்தில் பெரிய தடுப்பு சுவர் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Thottapetta , Ooty: The construction of a small bridge on the road from Ooty to Thottapetta is in full swing.
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ