சில நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்றான பி.1.1.529 பரவி வருகிறது! : மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரிக்கை

டெல்லி : புதிய வகை கொரோனா தொற்றான பி.1.1.529 பரவி வரும் நிலையில், வெளிநாட்டு விமான பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை  எழுதியுள்ளார். அதில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த நிலையில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா தொற்று வெளிநாடுகளில் பரவி வருவதை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங் காங் போன்ற நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் பயணிகளை மிக தீவிரமாக கண்காணித்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்நாடுகளில் இருந்து வரும் பயணிகளோடு தொடர்பில் இருந்தவரையும் கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 22 பேருக்கும் போட்ஸ்வானாவில் 4 பேருக்கும் ஹாங் காங்கில் 2 பேருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுகள் உறுதிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More