×

வகுப்பறை, புத்தகத்தின் முகப்பில் புகார் எண்: மாணவர்கள் புகார் மீது உரிய நடவடிக்கை: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்'

சென்னை: மாணவர்கள் தரப்பில் இருந்து எந்த புகார்கள் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.  சென்னை சாந்தோம் ரோசரி மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி பணிமனை இரண்டு நாட்களுக்கு நடக்கிறது. சென்னை கல்வி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 680 பேர் இந்த பணிமனையில் பங்கேற்க உள்ளனர். இதன் தொடக்க நிகழ்வு நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: படிப்பைக் காட்டிலும், விவாதப் பொருளாக இப்போது மாறியிருப்பது குழந்தைகளின் பாதுகாப்பு தான்.. மாணவர்களுக்கு எதிரான செயல்களை பதிவு செய்ய புகார் எண்களை கொடுத்துவிட்டால் அத்துடன் நமது கடமை முடிந்துவிட்டது என கருதாமல் ஆசிரியர்கள் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னை, கோவை என எங்கு நடந்த செயலாக இருந்தாலும் குற்றம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி மாணவர்கள் மீது அக்கறை உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு புத்தகத்தின் முகப்பிலும் புகார் எண் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறும்.

எல்லா துறையைக் காட்டிலும் பள்ளிக் கல்வித்துறையின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் முதல்வர்  மு.க.ஸ்டாலின். பல்வேறு இடங்களில் இதுபோல புகார்கள் வந்த நிலையில் விழிப்புணர்வு எப்படி ஏற்படுத்த போகிறீர்கள் என முதல்வர் எங்களை முடுக்கிவிட்டார். மன அழுத்தத்தில் குழந்தைகள் ஏதாவது தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். ஏற்கனவே, விழிப்புணர்வு, புகார் எண்கள் இருந்ததுதான். இருப்பினும் அதுகுறித்து நவம்பர் 19ம் தேதி திருச்சியில் விழிப்புணர்வு பயிற்சி அளித்தோம். அதே வேளையில் ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு அவசியம். தற்போது சென்னையில் நடக்கும் இந்த நிகழ்வில் 680 பள்ளிகளில் இருந்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வந்துள்ளனர்.விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆன்லைன் மூலமாகவும் நடத்த உள்ளோம். மேலும் மாணவர்கள் தரப்பில் இருந்து வரும் புகார்கள் எதுவாக இருந்தாலும் முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதே நேரத்தில் மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்பதால் தவறான புகார்களையும் அளிக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,Mahesh , Students, Minister Mahesh Poyamozhi, Information
× RELATED முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...