×

மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு: உடலில் விஷஊசி செலுத்தி அரசு டாக்டர் தற்கொலை: கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

சென்னை: மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் உடலில் தனக்கு தானே விஷ ஊசி செலுத்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அறையில் இருந்து கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல் கிருஷ்ணாபுரம் 3வது பிரதான சாலை, 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வர் (34). கடலூரை சேர்ந்த இவர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். நந்தினியும் டாக்டராக வேலை செய்து வருகிறார். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

டாக்டர் மகேஸ்வர் வழக்கம் போல் நேற்று முன்தினம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். அறுவை சிகிச்சை முடிந்து மாலை 6.15 மணிக்கு தனது காரில் மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று 811 என்ற அறையை பதிவு செய்து தங்கியுள்ளார். காரை அவரது ஓட்டுனர் கார்த்திக் ஓட்டி வந்துள்ளார். ஓட்டல் அறைக்கு வந்த பிறகு கார் ஓட்டுனர் கார்த்திக்கிடம், நான் போன் செய்தால் மட்டும் வந்தால் போதும் என்று கூறி அவரை வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே டாக்டர் மகேஸ்வர் நேற்று காலை பணிக்கு வரவில்லை. இதனால் அவருடன் பணியாற்றும் நண்பரான டாக்டர் வினோத் என்பவர் மகேஸ்வருக்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த வினோத், மகேஸ்வர் கார் ஓட்டுனர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு அவர், டாக்டர் மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருப்பதாக கூறியுள்ளார்.
அதன்படி டாக்டர் வினோத் உடனே நட்சத்திர ஓட்டலுக்கு வந்து மகேஸ்வர் தங்கியுள்ள 811 அறைக்கு சென்று பலமுறை கதவை தட்டியுள்ளார். ஆனால் மகேஸ்வர் கதவை திறக்க வில்லை. பிறகு டாக்டர் வினோத் சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறி மேலாளர் உதவியுடன் மாற்று சாவியை பயன்படுத்தி அறையை திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அறையின் கதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை.

அதைதொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் டாக்டர் வினோத் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அறையின் வலது புறம் படுக்கையில் படுத்த நிலையில் மகேஸ்வர் இறந்து கிடந்ததை பார்த்து வினோத் அதிர்ச்சியடைந்தார். மகேஸ்வர், இடது கையில் ஊசி குத்தப்பட்ட நிலையிலும், குளுக்கோஸ்பாட்டில் மூலம் மருந்துகள் செலுத்தப்பட்ட நிலையிலும் கிடந்தார். அவர் அருகே ஊசிகள், மருந்து, மாத்திரைகள் சிதறிக்கிடந்தன. டாக்டர் வினோத் தகவலின்படி, ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில்  போலீசார் வந்து மகேஸ்வர் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், டாக்டர் மகேஸ்வர் தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் ”தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. யாரையும் துன்புறுத்த வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ராயப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, டாக்டர் மகேஸ்வர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடன் பணியாற்றிய சக டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்த டாக்டர் மகேஸ்வர் பயன்படுத்திய செல்போனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் விஷ ஊசி போட்டு தான் தற்கொலை செய்து கொண்டாரா என்று உறுதி செய்யும் வகையில் போலீசார், டாக்டர் மகேஸ்வர் அறையில் கைப்பற்றப்பட்ட ஊசி, மருந்துகள் அனைத்தையும் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : Mylapore , Government Doctor, Suicide
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது