கொரோனா காலத்தில் 50 ஆக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் 10ஆக குறைப்பு: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலின் போது 50 ஆக இருந்த நடைமேடை டிக்கெட் கட்டணம் நேற்று முதல் 10ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தெற்கு ரயில்வேயில், அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்தன. மேலும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முன்பதிவு பெட்டிகள் கொண்ட ரயில்களை மட்டுமே தெற்கு ரயில்வே இயக்கி வந்தது. இதையடுத்து பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய ரயில் நிலையங்களில், பொதுமக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக, நடைமேடை டிக்கெட் கட்டணத்தையும் தற்காலிகமாக ரயில்வே நிர்வாகம் உயர்த்தியது.

அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 10 ஆக இருந்த நடைமேடை டிக்கெட் கட்டணம் 50 ஆக திடீரென உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் நேற்று முதல் முன்பதிவில்லா பெட்டிகளும் ரயில்களில் இணைக்கப்பட்டு தெற்கு ரயில்வேயில் இயங்கும் ரயில்கள் அனைத்தையும் வழக்கம் போல இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து நடைமேடை டிக்கெட் கட்டணத்தையும் மீண்டும் பழைய கட்டணத்துக்கு மாற்றியமைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் அதிகம் இருந்த போது, பொதுமக்கள் ரயில் நிலையங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக நடைமேடை டிக்கெட் கட்டணம் 10ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் நேற்று முதல் ரயில் நிலையங்களில் மீண்டும் கட்டணம் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More