×

தமிழகம் முழுவதும் 451 கோயில்களில் திருப்பணிக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்ரியா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சென்னை வடபழனி முருகன் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திண்டுக்கல் மாவட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மாவட்டம்  கூடழலகர் கோயில், காஞ்சிபுரம் குன்னவாக்கம் வேணுகோபாலசுவாமி கோயில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காளகஸ்தீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காசி விஸ்வநாதர் கோயில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில், சேலம் மாவட்டம் மேட்டூர்  சென்றாயப் பெருமாள் கோயில், கோவை மாவட்டம் கோட்டை  கங்கமேஸ்வரர் கோயில், மயிலாடுதுறை சீர்காழி  வீரநரசிம்மப்பெருமாள் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ரத்தினகிரீஸ்வரசுவாமி கோயில், தஞ்சாவூர் மாவட்டம்  கோபுராபுரம் சொர்ணபுரீஸ்வரர் கோயில், திருச்சி மாவட்டம் லால்குடி  லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உட்பட 451 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்வதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைந்து குடமுழுக்கு நடத்தப்படும். வடபழனி முருகன் கோயிலில் ஜனவரி மாதத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் 250 கோடியிலும், திருச்செந்தூர் கோயில் 300 கோடியிலும், பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் 125 கோடியிலும் திருப்பணி செய்யப்பட உள்ளன. இப்பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு நடத்தப்படும். 88 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் மற்றும் 32 மாவட்டங்களுக்கு மாவட்ட குழுக்கள் நியமனம் குறித்து விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


Tags : Tamil Nadu ,Minister ,Sekarbabu , Tamil Nadu, Minister Sekarbabu, Information
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...