×

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி விலை கிலோவுக்கு 30 குறைந்தது: n பச்சை பட்டாணி, பீன்ஸ், முருங்கை, இஞ்சி விலை உயர்வு: கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமிற்கு மாறினர்

சென்னை: வரத்து அதிகரிப்பை தொடர்ந்து சென்னையில் தக்காளி விலை நேற்று கிலோவுக்கு 30 வரை குறைந்தது. அதே நேரத்தில் பச்சை பட்டாணி, பீன்ஸ், முருங்கைக்காய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து விலையும் கடந்த 20 நாட்களுக்காக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து 120 வரை விற்கப்பட்டது. இதுவே சில்லறை விலையில் தரத்திற்கு ஏற்றார் போலும், ஏரியாக்களுக்கு தகுந்தார் போலும் தக்காளி விலை கிலோ 140 முதல் 150, 160, 170, 180 என்று விற்பனை செய்யப்பட்டது. 5 கிலோ 10 என்று கூவி கூவி விற்ற நிலை மாறி தக்காளி விலை புதிய சாதனையை படைத்தது. அதுவும் தக்காளியை தேர்வு செய்து எடுக்கக்கூடாது என்றும் கடைக்காரர்கள் கறாராக கூறி வருகின்றனர்.

தக்காளி தான் சமையலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் சமையலுக்கு தக்காளி சேர்ப்பதை வெகுவாக குறைக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக இட்லி, தோசைக்கு சைடிஸ்க்காக நிறைய வீடுகளில் தக்காளி சட்னி இருந்தது, தற்போது அது கட் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக தேங்காய் சட்னியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மேலும் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி வழங்குவது சில கடைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளியை மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை நேற்று காலையில் கிலோவுக்கு 30 வரை குறைந்துள்ளது. அதாவது இரண்டு நாட்களுக்கு முன்னர் 100க்கு விற்ற தக்காளி நேற்று காலையில் 70க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி கிலோவுக்கு 30 வரை விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து மழையால் வெகுவாக குறைந்துள்ளது. 500 லாரிகளில் வந்த காய்கறி தற்போது 300 லாரிகளில் தான் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. பீன்ஸ் கிலோ 40லிருந்து 80 ஆகவும், கேரட் 50லிருந்து 60, கோஸ் 15லிருந்து 25 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. மேலும் நூக்கல் 15லிருந்து 20, பச்சை பட்டணி 110லிருந்து 140, முருங்கைக்காய் 50லிருந்து 100, அவரைக்காய் 40லிருந்து 60, சேனைக்கிழங்கு 20லிருந்து 30, பாகற்காய் 30லிருந்து 40, உருளைக்கிழங்கு 20லிருந்து 30, சேப்பங்கிழங்கு 30லிருந்து 35, பல்லாரி 30லிருந்து 40, இஞ்சி 50லிருந்து 70, கொத்தவரைக்காய் 30லிருந்து 40 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு மாதத்திற்கு இப்படி தான் இருக்கும். விலை குறைய வாய்ப்பில்லை. மழை விட்ட பின்னர் தான் காய்கறி விலை குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை. இதனை வாங்கி சில்லறை மார்க்கெட்டில் விற்பவர்கள் கிலோவுக்கு 20 முதல் 30 வரை அதிகமாக விற்கின்றனர். தக்காளி சில்லறை மார்க்கெட்டில் கிலோ 100க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. காய்கறி விலை ஏற்றத்தால் கிலோ கணக்கில் காய்கறி வாங்கி வந்தவர்கள் 100 கிராம், 200 கிராம், கால் கிலோ என்று வாங்கி சமையலுக்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதுவும் காய்கறியை சிக்கமான பயன்படுத்தி வருகின்றனர். காய்கறி விலை ஏற்றம் ஏழை, நடுத்தர மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளதாக இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Coimbatu , Coimbatore Market, Tomato Price
× RELATED கோயம்பேடு – ஆவடி இடையே 43 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை?