×

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ‘மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்தா கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது,’ என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உட்பட சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து, இந்தியா கேட் வரையிலான ராஜபாதை முழுவதும் உள்ள 86 ஏக்கர் நிலப் பகுதியை, ‘சென்ட்ரல் விஸ்தா’ என்ற பெயரில் மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை வரும் 2022ம் ஆண்டுக்குள் முடித்து 75வது சுதந்திர தினத்தன்று முதல் கூட்டத்தை நடத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் கொரோனா 2வது அலை உச்சக் கட்டத்தை எட்டியதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் சில வாரங்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி, சென்ட்ரல் விஸ்தா திட்டம் மற்றும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அனாயா மல்கோத்ரா, சோஹேய்ல் ஹாஸ்மி ஆகியோர்  டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர்.  தலைமை நீதிபதி அமர்வில் இந்த விசாரணை நடந்தபோது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதத்தில், ‘‘ சென்ட்ரல் விஸ்தா திட்டத்திற்கு தற்போது என்ன அவசரம்? டெல்லியில் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு நோய் தொற்று பரவ அதிகம் வாய்ப்பு உள்ளது,’’ என்றார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த 17ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் தலைமையிலான் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘மத்திய அரசு கொண்டு வந்து நடைமுறையில் உள்ள சென்ட்ரல் விஸ்தா திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. இது அரசின் கொள்கை சார்ந்தது மட்டும் கிடையாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். அதனால், இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. மேலும், திட்டத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவரும் வெளியில் எங்கும் போகாமல் அங்கேயே தான் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதனால், நோய் தொற்று ஏற்படும் என்ற கோரிக்கையிலும் முகாந்திரம் இல்லை,’’ என்று கூறிய நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்தனர்.1 லட்சம் அபராதம்இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பட்டேல் அமர்வு, வழக்கு தொடர்ந்தவர்களை கடுமையாக எச்சரித்தது. மேலும், ‘‘இந்த வழக்கு முழுமையான உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதால் மனுதாரர்களுக்கு ரூ.1 லட்சம் நீதிமன்றம் அபராதம் விதிக்கப்படுகிறது,’’ என்றும் உத்தரவிட்டனர்.    …

The post புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,New Delhi ,government ,Central ,Vista ,
× RELATED வெறுப்பு பேச்சு, நடத்தை விதி மீறல்...