×

திருத்தணி, திருச்சி, திருச்செங்கோடு, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் மலைக்கோயில்களுக்கு ரோப் கார் வசதி செய்ய முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் பி.ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது:  முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு  பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் மலை உச்சியில் உள்ள  கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதேபோல்,  தமிழகத்தில் மலை உச்சியில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர்  கோயில், ராணிப்பேட்டை ரத்னகிரியில் உள்ள  முருகன் கோயில், திருச்சி  மலைக்கோட்டை விநாயகர் கோயில் உள்ளிட்ட 33 கோயில்களுக்கும் ரோப் கார் வசதி  செய்து தரக்கோரி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் கடந்த  ஜூலை 17ம் தேதி மனு அனுப்பினேன். எனது மனு மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு பொறுப்பு தலைமை  நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட்  ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே, பழநி தண்டாயுதபாணி கோயிலில்  ரோப் கார் வசதி உள்ளது. தற்போது, சோளிங்கர் மலை கோயிலுக்கும், கரூர் அய்யன் மலை கோயிலுக்கும் ரோப் கார்  வசதி செய்யும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதுமட்டுமல்லாமல்  திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை,  திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் மலை உச்சியில் உள்ள கோயில்களுக்கு  ரோப்கார் வசதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு  செய்யப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்தெந்த  கோயில்களுக்கெல்லாம் ரோப் கார் வசதி செய்ய முடியும் என்று ஆய்வு செய்து  அரசு முடிவு செய்ய வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க  வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Thiruthani ,Trichy ,Tiruchengode ,Thirunirmalai ,Thirukkalukkunram ,Government of Tamil Nadu , High Court, Government of Tamil Nadu, Information
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...