மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு

சென்னை: சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தினார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையால் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அமைச்சர் மெய்யநாதன் நேற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் அறிவிப்புகளின் தற்போதைய நிலையை கேட்டறிந்து துரிதப்படுத்தி நிறைவேற்ற வழிமுறைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை  மாற்றம் மற்றும் வனத்துறை தலைவர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்  உறுப்பினர் செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மற்ற நடவடிக்கைகளையும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் குறிப்பாக நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாப்பது, தொழில் வளாகங்களில் அதிக பசுமை போர்வை ஏற்படுத்துவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை முறையாக செயல்படுத்துவது மற்றும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்த அறிவுரை வழங்கினார். இதுதவிர, வாரியத்தின் ஏழு மண்டல அலுவலகங்களில் உள்ள இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் காணொலி காட்சிகள் மூலம் அங்கு உள்ள முக்கிய பிரச்னைகளையும் விவாதித்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார்.

Related Stories: