×

வாழ்வென்பது பெருங்கனவு!

நன்றி குங்குமம் தோழி

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்…

தொழில்முனைவோர் சுப்ரியா டேவிட்


நம் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அது வாழ்நாளில் நாம் கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்பதுவே. ஆனால், வாழ்க்கைப் பயணத்தில் திருப்பங்கள் ஏராளம் உண்டு. கனவுகளை நோக்கி அந்த பாதையில் செல்ல முடியாதபோது திருப்பங்களின் வழியே பயணிப்போம். அந்த பயணத்தை வேறொரு கனவாக மாற்றி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் பலர் உண்டு. அந்த வகையில், மருத்துவராகும் கனவு சில பல காரணங்களால் முடியாமல் போக மருத்துவத்துறை சார்ந்து படித்து இன்றைக்கு ஒரு தொழில் முனைவோராகியிருக்கும் சுப்ரியா டேவிட் தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

‘‘சென்னை தேனாம்பேட்டையில் பிறந்து வளர்ந்தேன். அப்பா வயர்மேன், அம்மா இல்லத்தரசி. சாதாரண நடுத்தர குடும்பம். அன்று அரசாங்கப் பணியில் சம்பளம் மிகக் குறைவு என்பதால் அப்பாவின் வருமானம் குடும்பச் செலவுகளுக்கே சரியாகயிருக்கும். பள்ளிப்படிக்கும்போது மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்பதுவே எனது லட்சியக் கனவாக இருந்தது. அதனால், நன்கு படித்தேன், நல்லதொரு மதிப்பெண்களையும் பெற்றேன். ஆனால், மருத்துப் படிப்பு படிக்க அதிக பணம் தேவைப்பட்டது. அன்றையச் சூழ்நிலையில் மருத்துவம் படிக்க வைக்க என் பெற்றோருக்கு வசதி இல்லாமல் போனது.

அதனால் என்ன,  மருத்துவம் சார்ந்து படித்து அதில் சாதித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக ஆப்தோமெட்ரி என்ற பாராமெடிக்கல் கோர்ஸை தேர்ந்தெடுத்துப் படித்தேன். நான்கு ஆண்டு படிப்பு அது, நான்காவது ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது அத்துறை சார்ந்த மற்றொரு படிப்பினை மலேசியாவில் படிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. வந்த வாய்ப்பினை எதற்கு தவறவிடவேண்டும் என்று மலேசியா சென்று படித்தேன். அத்துறையில் ஓர் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக மேலும் ஒரு கோர்ஸ்க்காக சிங்கப்பூரிலும் சென்று படிச்சேன்.

இப்படி ஆப்தோமெட்ரி கோர்ஸ்கள் அனைத்தும் படித்து முடித்து சென்னை திரும்பியதும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவ சிகிச்சை நிறுவனத்தில் கண் பரிசோதிப்பது, கேம்ப் போவது மற்றும் ஆலோசனை வழங்குபவராக பணியில் சேர்ந்தேன். இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள ஒரு கண்ணாடிக் கடையில் பணியில் சேர்ந்தேன். இந்தப் பணிகளின் மூலம் பல விசயங்களைக் கற்றுக்கொண்டதாலும், ஏற்கனவே கண் சிகிச்சைக் குறித்து படித்திருந்ததாலும் கற்பிப்பதில் ஆர்வம் பிறந்தது. அதனால் கல்லூரிகள் மற்றும் பிரபல கண் மருத்துவமனைகளுக்குச் சென்று பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றத் தொடங்கினேன்.

இந்த நிறுவனங்களில் அட்மினரி, டிப்ளமோ, பி.எஸ்சி மாணவர்கள் என மருத்துவத்துறை சார்ந்து பலர் இருந்தார்கள்’’ என்றவர் அடுத்த கட்டத்திற்கு நோக்கி பயணிக்க துவங்கினார். ‘‘அந்தக் காலகட்டத்தில் கான்டாக்ட் லென்ஸில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்  குழந்தைகளுக்கான பிரத்யேகப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவந்தது. அந்த  நிறுவனத்தில் கண் பார்வை சிகிச்சைக்கான தனிப்பிரிவும் இருந்தது. அதில் சர்ஜிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட் எல்லாம் செய்துகொண்டிருந்தார்கள். கூடவே கான்டாக்ட் லென்ஸ்சும் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். உலகத் தரத்தில் முன்னிலையில் அந்த நிறுவனம் இருந்ததால், அதில் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

கண் சிகிச்சை மருத்துவத்துறையில் இயங்க வேண்டுமென்றால் என்னவெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் தேடித்தேடி தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு நிறுவனமாக வேலை செய்துகொண்டிருந்தால் கடைசிவரை நல்லதொரு பணியாளராகவே இருந்துவிடுவோம். ஆனால் எனக்கோ ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. என் விருப்பத்தை என கணவர் டேவிட்டிடம் சொன்னேன். அவரும் அதே துறையை சேர்ந்தவர் என்பதால், என் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நானும் என் கணவரும் இணைந்து அரும்பாக்கத்தில் ‘ ஆப்டிக்கா மார்ட்(Optica mart)’ என்ற பெயரில் ஒரு கண்ணாடிக் கடையை துவங்கினோம்.

தொடக்கத்தில் இதனை எல்லோரும் இதுவும் எல்லா கடைகளையும் போலவே ஒரு  கண்ணாடி கடை தானே என நினைத்து குறைவானவர்களே வந்தனர். அது மனதிற்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆரம்ப காலத்தில் கடையில் ஸ்டாஃப் என்று யாரும் கிடையாது. தனி ஒருவராகவே கண் பரிசோதனை மற்றும் விற்பனை என எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தேன். என்னுடைய சிறந்த சேவையின் காரணமாக வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். வாடிக்கையாளர்களை எப்படி தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனும் தொழில்பக்குவமோ, தந்திரங்களோ எங்களுக்குத் அப்போது தெரிந்திருக்கவில்லை.

வெளிநாடுகளுக்குச் சென்று படித்து வந்திருந்ததாலும், தொழிலில் முழு ஈடுபாடு காட்டியதாலும் ஆறு ஏழு மாதங்களில் எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கினேன். அவர்கள் கொடுத்த தன்னம்பிக்கையில் சென்னை கே.கே. நகரில் அடுத்து ஒரு கடையைத் தொடங்கினோம். அடுத்தக்கட்ட முயற்சியாக இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தி அதிலிருந்து வாடிக்கையாளர்களை பெற்றோம். இந்த முகாம்கள் வழியே பல நூறு வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள் என்றால், அவர்களில் பத்து பேருக்காவது கேட்டரேக்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகயிருக்கும். அப்போது, எனக்கு பழக்கமான மருத்துவமனைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு இலவசமாக கேட்டரேக்ட் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.

இப்படி, எங்கள் ஆப்டிக்கல்ஸுக்கு வந்தால் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மக்கள் வாய்வழியே தான் எங்கள் கடைக்கான விளம்பரம் நடந்தது. இதில் ஆச்சரியப்படும்படியான விசயம் என்னவென்றால், சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் கண்ணாடியின் தரத்திற்கு எந்தவொரு சமரசமும் செய்யாமல் அதே தரத்தில் ஒரு கண்ணாடியை அறுநூறு ரூபாய்க்கு செய்து கொடுக்க முடியும் என்ற  நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாக்கினேன். எப்போதுமே, நான் பெரிய அளவில் லாபத்திற்கு ஆசைப்படுவதில்லை, மக்களின் நலனை மட்டுமே முக்கியமாக நினைக்கிறேன்.

ஏனெனில், எந்த ஒரு தொழிலும் நமக்கான லாபத்தை மட்டுமே எதிர்பார்த்து நடத்தினால் அது சில காலங்களில் காணாமல் போய்விடும். அதே நேரத்தில் சமூக அக்கறை சார்ந்து நடத்தினால் மட்டுமே வெற்றி நம்மைத் தேடி வரும் என்ற எண்ணம் என் மனதில் எப்போதுமே உண்டு’’ என்றவர் அடுததடுத்து கிளைகளை துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். ‘‘இன்றைக்கு ஏராளமான ஊழியர்கள் இருக்கிறார்கள். எங்கள் ஆப்டிக்கல்ஸில் வேலை செய்தவர்களில் சிலர் சொந்தமாக தொழில் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். இது நான் எதிர்பார்க்காத வளர்ச்சி. சாதாரண ஒரு கடையாக ஆரம்பித்தது இன்றைக்கு ஒரு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

பொருட்களின் தரம் மற்றும் சேவை அறிந்து இன்றைக்கு பல தொழில்முனைவோர்கள் ஃப்ரான்சைஸி கேட்டு வருகிறார்கள். இந்த ஆண்டில் எங்கள் பிராண்டை ஃப்ரான்சைஸி மாடலில் வளர்த்தெடுக்க வேண்டும், பத்துக்கும் மேற்பட்ட ஃப்ரான்சைஸி கடைகளைத் திறக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம். அடுத்து இந்த ஆப்தோமெட்ரி படிப்பு சார்ந்து நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே, ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும், மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும், அதன் மூலம் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சேவை செய்ய வேண்டும் என்பதே என் கண்முன்னே நிற்கும் பெருங்கனவாக உள்ளது. அதில், நிச்சயம் வெற்றிபெறுவேன். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதுபோல் எனது வெற்றிக்குப் பின்னால் எனது கணவரும் குழந்தையும் உள்ளனர்’’ என்ற பேரன்பான வார்த்தைகளுடன் முடித்தார் சுப்ரியா.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!